2016-07-14 16:19:00

“விளையாட்டு, மனித சமுதாயத்திற்குப் பணியாற்றவேண்டும்”


ஜூலை,14,2016. திருப்பீடத்தின் கலாச்சார அவையும், Allianz எனப்படும் பன்னாட்டு நிறுவனமும் இணைந்து, இவ்வாண்டு அக்டோபர் 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் அகில உலக கருத்தரங்கு ஒன்றை உரோம் நகரில் நடத்துகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“விளையாட்டு, மனித சமுதாயத்திற்குப் பணியாற்றவேண்டும்” என்ற மையக்கருத்துடன் திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர், கர்தினால் Gianfranco Ravasi அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில், விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள், மதத் தலைவர்கள் பலர் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"விளையாட்டுப் போட்டிகளில் சவால்களைச் சந்திப்பதுபோல், வாழ்க்கை விளையாட்டிலும் சவால்களை எதிர்கொள்ளுங்கள்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகள், இக்கருத்தரங்கிற்கு வித்திட்டன என்று, திருப்பீடக் கலாச்சார அவையின் நேரடிச் செயலர், அருள்பணி Melchor Sanchez de Toca அவர்கள் கூறினார்.

விளையாட்டுப் போட்டிகளில் இளையோர் காட்டும் ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றை, அவர்கள் வாழ்விலும் காட்டவேண்டும் என்ற எண்ணத்தை இளையோரில் வளர்க்க, இக்கருத்தரங்கும், அதன் விளைவாக உருவாகும் Humanity Sports Club என்ற உலகளாவிய இயக்கமும் முயற்சிகள் எடுக்கும் என்று, அருள்பணி Sanchez de Toca அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.