2016-07-14 15:43:00

இது இரக்கத்தின் காலம் : வன்முறையற்ற திருத்தம்


ஜப்பானில் ஒரு சிறு கிராமம் அது. இங்கு வாழ்ந்து வந்த மக்களுக்கு பெரும் தொல்லையாய் இருந்தார்கள் ஒன்பது திருடர்கள். இவர்களை அடக்கி, தங்களைக் காப்பதற்காக, பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஜென் குரு ஒருவரை அழைத்து வந்தனர் கிராம மக்கள். கிராமத்திற்கு வந்த குரு, அங்கிருந்த உணவகம் ஒன்றிற்குச் சென்றார். சாப்பிடுவதற்காக ஒரு கிண்ணத்தில் அரிசி சாதம் எடுத்து வரச் சொன்னார் அவர். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர், தனது இடிப்பில் சொருகியிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை, வெட்டுக் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார். விடயம் அறிந்த ஒன்பது திருடர்களும் ஜென் குரு சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர். குருவுக்கு அது தெரிந்துவிட்டது. அப்போது அக்குருவின் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் அவர் தன்னுடைய வெட்டுக்குச்சியை உயர்த்தி மேலே பறந்து கொண்டிருந்த ஈயினை அடித்தார், பார்க்காமலே. ஒவ்வொரு முறையும் ஒரு ஈ செத்து விழுந்தது. ஒருமுறைகூட குறி தவறவே இல்லை. இப்படி ஒன்பது முறை ஒன்பது ஈக்களை மிகத் துல்லியமாக அடித்துக் கொன்றார். பின்பு திரும்பிப் பார்த்தார். மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணாமல் போயிருந்தனர். அன்றைக்குச் சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.