2016-07-13 16:03:00

ஓய்வு என்பது துறவிக்கு கிடையாது - அருள்பணி லொம்பார்தி


ஜூலை,13,2016. தன்னால் இயன்ற அளவு பணியாற்ற தான் விழைந்ததாகவும், பணிமாற்றம் குறித்த முடிவை ஏற்க தான் எப்போதும் தயாராக இருந்ததாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக திருப்பீடச் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிவந்த இயேசுசபை அருள்பணி லொம்பார்தி அவர்கள், இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுவது குறித்தும், திருப்பீடத்திற்கென பல்வேறு துறைகளில் தான் பணியாற்றியது குறித்தும் வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறினார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய இரு திருத்தந்தையருக்குப் பணியாற்றிய வேளையில், அருள்பணி லொம்பார்தி அவர்கள் சந்தித்த மிகப்பெரும் சவால்கள் என்ன என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், பாலின வன்முறை குறித்து திருஅவை சந்தித்த பிரச்சனைகளும், வத்திக்கான் ஆவணங்கள் இரகசிய முறையில் வெளியானதைக் குறிப்பிடும் Vatileaks என்ற பிரச்சனையும் தான் சந்தித்த பெரும் சவால்கள் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் குறிப்பிட்டார்.

இறைவனின் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு துறவிக்கு ஓய்வு என்பது கிடையாது, மாறாக, திருப்பீடப் பணிகளிலிருந்து ஓய்வு பெறுவதை பணி மாற்றம் என்று  அழைப்பதே பொருத்தம் என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியின் இறுதியில் கூறினார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தலைமைப் பணியைத் துறந்த வேளையிலும், அதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்ந்தெடுக்க கான்கிளேவ் எனப்படும் கர்தினால்கள் அவை நடைபெற்ற வேளையிலும் உலகின் ஆயிரக்கணக்கான தொடர்பு சாதனங்களுக்கு தகுந்த விவரங்களை திறமையாக வழங்கி வந்தவர், அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி என்று ஊடகங்கள் அவரைப் பாராட்டி வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.