2016-07-12 14:59:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 30


2014ம் ஆண்டு, முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவு கடைபிடிக்கப்பட்டது. இந்த நூற்றாண்டு நினைவையொட்டி, 2014ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் உலகப்போரில் இறந்த இத்தாலிய வீரர்கள், அதிக எண்ணிக்கையில், அடக்கம் செய்யப்பட்டுள்ள Redipuglia கல்லறைக்குச் சென்று, திருப்பலி நிறைவேற்றினார். இத்திருப்பலியில் மறையுரை வழங்கியபோது, தற்போது உலகின் பல பகுதிகளில் வன்முறைகள், தாக்குதல்கள் நடைபெற்றுவருவதை, ‘மூன்றாம் உலகப் போர்’ என்று, திருத்தந்தை குறிப்பிட்டார்.

மனித வரலாற்றில், போர்கள் நடைபெற்றபோது, ஒரு குறிப்பிட்ட இடத்தை போர்க்களம் என்று ஒதுக்கி, அங்கு படைகள் மோதி வந்தன. முதல், இரண்டாம் உலகப் போர்களில், மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் போர் நுழைந்தது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் அமெரிக்க அரசு, இரு அணுகுண்டுகள் வழியே, பல்லாயிரக்கணக்கான மக்களை அழித்ததை இன்னும் மறக்கமுடியாமல் தவிக்கிறோம். இன்றையப் போர்கருவிகள், தொழில் நுட்பத்தில் முன்னேறிவிட்டதால், நாம் வாழும் பகுதிகளே போர்க்களங்களாக மாறிவருகின்றன. இது மட்டுமல்லாமல், 'போர்' என்ற அறிவிப்பு ஏதுமின்றி, எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத இடங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் பெருகிவருவதால், உலகம் முழுவதும் போர்க்களமாக மாறி வருகின்றது. ஆயுதங்களை உற்பத்தி செய்யும் அரக்கர்களின் பேராசையால், சிறு, சிறு காரணங்களும் பெரும் மோதல்களாக வெடிக்கின்றன. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘மூன்றாம் உலகப் போர்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறிய அளவிலும், பெரிய அளவிலும் நடைபெற்றுவரும் இந்த ‘மூன்றாம் உலகப் போரின்’ பின்னணியில், ஒருவரை ஒருவர் மன்னிக்க முடியாத மனநிலையும், பழிக்குப் பழி என்ற வெறியும் ஊடுருவியிருப்பதைக் காணமுடிகிறது.

நம் மனங்களில் ஊற்றப்படும் வெறுப்பு என்ற அமிலம், நம் சிந்திக்கும் திறனை அரித்துவிட்டால், அழித்துவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு, 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, ஓர் எச்சரிக்கை நாளாக அமைந்தது. அன்று, நியூயார்க் நகரில், உலக வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்ச்சி, நம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருந்து வருகிறது.

இந்த வன்முறை நிகழ்வைத் தொடர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு எடுத்த முதல் முடிவு, பழிக்குப் பழி என்ற முடிவு. இந்த அழிவை உருவாக்கியவர்களை, வேரோடு அழிப்போம் என்ற சூளுரையோடு, அமெரிக்க இராணுவம் புறப்பட்டது. இவர்களுக்குத் துணையாக, பிரித்தானிய அரசும் தன் இராணுவத்தை அனுப்பி வைத்தது.

ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளைக் குறித்து, Sir John Chilcot என்பவர் தலைமையில், கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஒரு விசாரணையின் முடிவுகள், Chilcot அறிக்கை என்ற பெயரில், ஜூலை 6ம் தேதி, வெளியானது. 2003ம் ஆண்டு, பிரித்தானிய அரசு, ஈராக் நாட்டின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை தேவையற்றது என்று, இவ்வறிக்கை கூறியது. இவ்வறிக்கையைத் தொடர்ந்து, பல கண்டனக் குரல்கள், உலக அரங்கில் ஒலித்து வருகின்றன.

ஜூலை 11, திங்களன்று வெளியான ஒரு குரல், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு எதிராக எழுந்துள்ளது. அல்கெய்தா என்ற அடிப்படைவாத வன்முறைக் குழுவின் தலைவரான ஒசாமா பின் லேடன் அவர்களின் மகன், ஹம்சா பின் லேடன் என்ற 20 வயது இளைஞர், அமெரிக்க ஐக்கிய நாட்டைப் பழிவாங்கப் போவதாக ஒலி வடிவச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

பழிக்குப் பழி, அதாவது, கண்ணுக்கு கண் என்று இவ்வுலகம் வாழ்ந்தால், அனைவரும் குருடாவோம் என்று, மகாத்மா காந்தி அடிகள் சொல்லிச் சென்றார். பழிக்குப் பழி என்பது எவ்விதம் ஒரு தொடர் சங்கிலியாகிறது என்பதற்கு, இரு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. 2014ம் ஆண்டின் இறுதியில், (டிசம்பர் 16), பாகிஸ்தான், பெஷாவர் நகரில், தாலிபான் வன்முறையாளர்கள், பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொன்று குவித்த செய்தி, நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தது. பாகிஸ்தான் இராணுவம், தங்கள் பகுதிகளில் மேற்கொண்ட தாக்குதல்களில், தங்கள் குடும்பங்களையும், குழந்தைகளையும் பறிகொடுத்ததால் இத்தாக்குதலைத் தாங்கள் மேற்கொண்டதாக, தாலிபான் குழுவினர் கூறியது, நம்மை மேலும் அதிர்ச்சியுறச் செய்தது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் தீவிரவாதிகள் மீது இன்னும் அதிகமானத் தாக்குதல்களை மேற்கொண்டது. இவ்விதம் பழிக்குப் பழி என்ற முடிவில்லா சங்கிலி தொடர்கிறது.

பெஷாவர் நகரில் நடைபெற்ற கொடூர நிகழ்வுக்குப் பின், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நான் கண்ட ஒரு செய்தித் தொகுப்பு என்னை வெகுவாகப் பாதித்தது. தீவிரவாதிகளை தூக்கிலிடுவதை நிறுத்திவைத்திருந்த பாகிஸ்தான் அரசு, பெஷாவர் தாக்குதலுக்குப்பின், மீண்டும், தூக்குத் தண்டனைகளைத் துவங்கியுள்ளதை தாங்கள் வரவேற்பதாக ஒரு சிலர் இந்நிகழ்வில் பேசினர்.

கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த 5 வயது சிறுவனை, தொலைக்காட்சி தனிப்பட்ட வகையில் காட்டியது. அச்சிறுவன், ஓர் இராணுவ வீரனைப் போல உடையணிந்திருந்தான். அவன் கையில் ஒரு பொம்மைத் துப்பாக்கி வேறு! துணிவிருந்தால், தாலிபான்கள் தன்னிடம் மோதிப் பார்க்குமாறு அச்சிறுவன் சவால் விடுத்தான். தனி ஆளாய் தான் 20 தாலிபான்களைச் சுட்டு வீழ்த்தப் போவதாக அந்தப் பிஞ்சு மனம் தொலைக்காட்சியில் பறைசாற்றியது. அக்குழந்தையின் மனதில் இந்த எண்ணங்கள் தானாகத் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. அச்சிறுவனுக்கு தாலிபான்கள் என்றால் யார் என்ற எண்ணம் கூட இருக்காது. அவனது பெற்றோர், அல்லது, மற்ற உறவினர்கள், அந்த பிஞ்சு மனதில் இத்தகைய எண்ணங்களை விதைத்திருக்க வேண்டும். அந்தக் காட்சியைக் கண்டபோது, உண்மையில் என் மனம் வேதனையில் வெந்துபோனது.

பாகிஸ்தானிலும், இன்னும், உலகின் பல நாடுகளிலும், வயதில் முதிர்ந்த மதத்தலைவர்கள், பழிக்குப் பழி என்ற வெறியினால், சிந்திக்கும் திறனை இழந்து தவிக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்கள், பழிக்குப் பழி என்ற வெறியை, குழந்தைகள், இளையோர் மனங்களில் வளர்ப்பது, மிகுந்த வேதனையைத் தருகிறது.

நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வை பின்னோக்கிப் பார்க்கும்போது, பெரும்பாலான நேரங்களில், முதலில் மனதில் தோன்றுவது, நம்மைத் துன்புறுத்திய நிகழ்வுகள். ஆழமான, நீண்ட கால பாதிப்புக்களை மனதில் உருவாக்கும் வலிமை பெற்றவை, துன்பங்கள். உடலளவில் உருவான துன்பங்கள் தீர்வதற்கு, மருத்துவ உதவியை நாடுகிறோம். உள்ளத்தளவில் உருவான துன்பங்கள் தீர்வது, மருந்து, மாத்திரைகளால் உருவாகும் மாயம் அல்ல. அதற்கு, பொறுமை, மிக, மிக அவசியம். மன்னிப்பு என்ற மருந்து ஒன்றே மனதில் உருவான காயங்களை ஆற்றும், அங்கு கூடியிருக்கும் சுமையைக் குறைக்கும்.

'மன்னிக்க மறுத்த பணியாளர்' உவமையில், தன் உடன் பணியாளரின் கடனை மன்னிக்க மறுத்தவரை, வதைப்போரின் கைகளில் அரசர் ஒப்படைத்தார் என்று இவ்வுவமையின் இறுதியில் இயேசு கூறியுள்ளார். உடன் பணியாளரின் கடனை மன்னிக்க மறுத்ததால், அவ்வூழியர் தன்னைத் தானே ஏற்கனவே வதைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். அவரை மற்றவர்கள் வதைத்தது, கூடுதல் தண்டனையே!

மன்னிப்பு வழங்குவதால், இவ்வுலகம், தான் பட்ட காயங்களிலிருந்து குணமாகும் என்பதற்கு, இரண்டாம் உலகப் போரில் நாத்சி வதை முகாம்களுக்குப் பிறகு நடந்த மனதை உருக்கும் பல்லாயிரம் மன்னிப்பு நிகழ்ச்சிகள் பாடமாக அமைகின்றன. நாத்சி வதை முகாம் ஒன்றில் சுவற்றில் ஒரு செபம் எழுதப்பட்டிருந்தது. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும். தங்களுக்குத் தீமை செய்தவர்களை, இறைவன் மன்னிக்கவேண்டும் என்ற வேண்டுதலாக ஒலிக்கும் அவ்வரிகளுக்குச் செவிமடுப்போம்.

“இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவற்றையும் நினைவு கூர்ந்தருளும். எங்களை வதைத்தவர்களும், நாங்களும் இறுதித் தீர்வைக்கு வரும் போது, அவர்கள் விளைத்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட நற்பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து, அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.”

தவறு செய்யும் ஒருவரை, எத்தனை முறை மன்னிப்பது, ஏழுமுறை மட்டுமா? என்று கேட்ட புனித பேதுருவிடம், வரைமுறை ஏதுமின்றி மன்னிக்கவேண்டும் என்று இயேசு பதிலளித்தார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில், முழுமையைச் சுட்டிக்காட்டும் 7 என்ற எண்ணைப் பயன்படுத்தி, 'எழுபது தடவை ஏழு முறை' (மத்தேயு 18: 22) மன்னிக்கவேண்டும் என்று இயேசு அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.

மன்னிப்பு என்பது, அரைகுறையாக, அளந்து பார்த்துத் தரவேண்டிய கடனாக இல்லாமல், முழுமையானதாக, அளவற்ற வகையில் அள்ளித்தரவேண்டிய கொடையாக இருக்கவேண்டும் என்பதே, பேதுருவுக்கும், நமக்கும் இயேசு வழங்கும் பாடம். இந்தப் பாடத்தை இன்னும் ஆழமாக வலியுறுத்த, இயேசு கூறிய உவமையே, மன்னிக்க மறுத்தப் பணியாள் உவமை.

நாம் விடும் சுவாசத்தைப் போல, மன்னிப்பும் நம் இயல்பாகவே மாற வேண்டும் என்ற கருத்தை இயேசு தன் வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்வாலும் சொல்லித் தந்தார். அதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பலர் சொன்ன கூற்றுக்களில் என் மனதில் ஆழமாய்ப் பதிந்தவை, Mark Twain என்ற எழுத்தாளர் சொன்ன அற்புதமான வார்த்தைகள்: “Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it” அதாவது, தன்னை மிதித்து, சின்னாபின்னமாக்கிய கால்களிலும் ஒரு மலர் தன் நறுமணத்தைப் பதிக்கிறதே, அதுவே மன்னிப்பு.

நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் இது போல் பல எடுத்துக்காட்டுக்களைக் காணலாம். தன்னைக் கசக்கிப் பிழிபவர் கையில், இனிய சாறாய் கரும்பு மாறுகிறதே, அதுவே மன்னிப்பு. தன்னைச் சுட்டெரித்தாலும் சந்தனம் நறுமணம் தருகிறதே, அதுவே மன்னிப்பு. தங்களை வெட்டுகிறார்கள், விறகாய் எரிக்கிறார்கள் என்பதற்காக, மரங்கள், நிழல் தர மறுக்கின்றனவா? இல்லையே. இயற்கையில் இவ்வாறு ஒவ்வொன்றும் தங்களுக்குத் துன்பங்கள் விளைவித்தவருக்கும் நல்லதைக் கொடுப்பதையே இயல்பாகக் கொண்டிருக்கும்போது, மனித இயல்பு மட்டும், என் நேரத்திற்கு ஒன்றாய் மாறுகிறது?

வாழ்வில் அன்பையும், மகிழ்வையும் நிறைவாய் உணர்வதைவிட வேறு ஓர் உயர்ந்த இயல்பு, மனிதருக்குக் கிடையாது. அந்த இயல்பை அடைவதற்கு அடித்தளம், மன்னிப்பு. மன்னிப்பு தருவதும், பெறுவதும் முழு மனித நிறைவுக்கு நம்மை இட்டுச்செல்லும்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய “அமைதியின் கருவியாய் என்னை உருவாக்கும்” என்ற அற்புத செபத்தின் ஒரு பகுதியோடு ‘மன்னிக்க மறுத்தப் பணியாள் உவமை’யில் நாம் மேற்கொண்ட தேடலை நிறைவு செய்வோம்.

"மன்னிப்பதாலேயே, மன்னிப்பு பெறுகிறோம்.

கொடுப்பதாலேயே பெறுகிறோம்.

இறப்பதாலேயே நிறைவாழ்வில் பிறக்கிறோம்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.