2016-07-12 16:28:00

துன்புறுவோர்க்கு திருஅவை வழங்கும் உதவிகளை அரசு தடுப்பதேன்?


ஜூலை,12,2016.  வெனிசுவேலாவின்  அமைதிக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் அரசுத்தலைவர், அந்நாட்டின் உணவு நெருக்கடியை களைய முயலும் திருஅவையின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முனைவது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது அந்நாட்டுத் திருஅவை.

அரசின் கொள்கைகள் நாட்டு நலனை மனதில் கொண்டதாக இல்லை என குற்றம் சாட்டிய வெனிசுவேலா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் தியேகோ பத்ரோன் அவர்கள், 160 அத்தியாவசியப் பொருட்களின் மீது விலைக் கட்டுப்பாடு இருப்பினும், அவைகள் கடைகளில் இருந்து மாயமாகி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுப்பதில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றார்.

உணவு நெருக்கடி இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், மக்களிடையே ஒருவித நிச்சயமற்ற நிலை, நம்பிக்கையின்மை, ஏமாற்றம், கோபம் மற்றும் சமூக வன்முறைகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்ற கவலையையும் வெளியிட்டார் பேராயர்.

துன்புறும் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை திருவையின் காரித்தாஸ் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மூலம் வழங்க முன்வரும் நடவடிக்கைகளை அரசு அனுமதிக்க மறுப்பது குறித்தும் தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டார் பேராயர் பத்ரோன்.

ஆதாரம் : EWTN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.