2016-07-12 16:10:00

தவறானதற்கெதிராய் உறுதியாய் நின்று செயல்பட அழைப்பு


ஜூலை,12,2016. பிலிப்பைன்சில், தவறானதற்கெதிராய் உறுதியாய் நின்று செயல்படுமாறும், எச்சூழலிலும் உண்மைக்காகப் போராடுவதில் துணிச்சல் கொள்ளுமாறும், அந்நாட்டு ஆயர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தலத்திருஅவைத் தலைவர்.

பிலிப்பைன்சில் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகர்கள் கொல்லப்படும் ஒரு சூழலில் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரட்டீஸ் வியேகாஸ் அவர்கள், அறநெறிப்படி தவறானதற்கெதிராகவும், மனித வாழ்வைப் பாதுகாப்பதற்கும் ஆயர்கள் உறுதியாய்ச் செயல்படுமாறு கேட்டுள்ளார்.

திருஅவையின் நற்போதனைகளை மக்கள் சகித்துக்கொள்ளாத காலமும் வரக்கூடும் என்று எச்சரித்துள்ள பேராயர் வியேகாஸ் அவர்கள், திருஅவையின் போதனைகள், விழலுக்கு இரைத்த நீராகப் போனாலும், சரியானதைச் சரி எனவும், தவறானதைத் தவறு எனவும் சொல்வதில் துணிச்சல் கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் ஆயர்கள் பேரவையின் 113வது நிறையமர்வு கூட்டத்தில் இவ்வாறு பேசிய பேராயர் வியேகாஸ் அவர்கள், 1986ம் ஆண்டின், “மக்கள் சக்தி” நிகழ்வில், ஆயர்கள் மிகவும் போற்றப்பட்டு, மதிக்கப்பட்டதையும் நினைவுபடுத்தினார்.

கடந்த ஜூன் 30ம் தேதி பிலிப்பைன்சில் புதிய அரசுத்தலைவர் பதவியேற்றுள்ளதற்குப் பின்னர் நடைபெற்றுள்ள இக்கூட்டம், ஆயர்களுக்கும், தலத்திருஅவைக்கும் முக்கியமானதாக நோக்கப்படுகிறது.  

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.