2016-07-12 16:18:00

தனிமை உணர்வுகளை மாற்ற உதவி, தற்கொலைகளைத் தடுக்கலாம்


ஜூலை,12,2016. கானடாவில் கருணைக்கொலைக்கு உதவும் சட்டத்தின் முன்னால், வாழ்விற்கான மதிப்பு மிக வேகமாக அழிந்து வருவதாக அந்நாட்டு பேராயர் மிக்கேல் மில்லர் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

தற்கொலைக்கு உதவும் கானடாவின் புதிய சட்டம் மூலம், நோயால் துன்புறும் மக்கள் குறித்த ஏனையோரின் அணுகுமுறையில் பெரியதொரு எதிர்மறை மாற்றம் நிகழ்ந்துள்ளதாக உரைத்த Vancouver பேராயர் மில்லர், துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி தற்கொலையே என்ற எண்ணப்போக்கு மாற்றப்படவேண்டும் என விண்ணப்பித்தார்.

தாங்கள் தனிமையில் விடப்பட்டுள்ளோம், பிறரால் கைவிடப்பட்டுள்ளோம் என்ற உணர்வுகளை நோயாளிகளின் மனங்களிலிருந்து மாற்ற உதவுவதன் மூலம் தற்கொலைகளைத் தடுக்கலாம் எனவும் கூறினார் பேராயர். கருணைக்கொலைக்கு உடந்தையாகாமல், மனச்சான்றின் குரலுக்குச் செவிமடுத்து வாழ விரும்பும் மக்களுக்குத் துணை நிற்க கானடா திருஅவை எப்போதும் தயாராக உள்ளது என மேலும் கூறினார் பேராயர் மில்லர்.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.