2016-07-12 14:51:00

இது இரக்கத்தின் காலம் : நாத்சி வதை முகாமின் பாடம்


மன்னிப்பு வழங்குவதால், இவ்வுலகம், தான் பட்ட காயங்களிலிருந்து குணமாகும் என்பதற்கு, இரண்டாம் உலகப் போரில் நாத்சி வதை முகாம்களுக்குப் பிறகு நடந்த மனதை உருக்கும் பல்லாயிரம் மன்னிப்பு நிகழ்ச்சிகள் பாடமாக அமைகின்றன. நாத்சி வதை முகாம் ஒன்றில் சுவற்றில் ஒரு செபம் எழுதப்பட்டிருந்தது. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும். தங்களுக்குத் தீமை செய்தவர்களை, இறைவன் மன்னிக்கவேண்டும் என்ற வேண்டுதலாக ஒலிக்கும் அவ்வரிகள் இவையே:

“இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவற்றையும் நினைவு கூர்ந்தருளும். எங்களை வதைத்தவர்களும், நாங்களும் இறுதித் தீர்வைக்கு வரும் போது, அவர்கள் விளைத்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட நற்பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து, அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.”

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.