2016-07-12 15:43:00

அனைத்து மதங்களும் பங்குகொள்ளும் தேசிய கலந்துரையாடல் அவசியம்


ஜூலை,12,2016. மதத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை இரத்து செய்வதற்கு முன்னர், அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய, தேசிய அளவிலான ஒரு கலந்துரையாடல் அவசியம் என, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் நடைமுறையில் இருந்துவரும் ஒவ்வொரு மதத்திற்கும் உரிய சட்டங்களுக்குப் பதிலாக, எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒரு சட்டத்தை அமைப்பதற்கு, இந்திய சட்டக் குழுவை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த மாதத்தில் கேட்டுள்ளதையடுத்து இவ்வாறு கூறியுள்ளனர் கத்தோலிக்க ஆயர்கள்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், இந்தியாவின் ஒற்றுமை, குறையற்ற முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று    குறிப்பிட்டுள்ளார்.

ஒரே பொதுவான சட்ட விதிமுறையைக் கொண்டுவருவது குறித்த அனைத்து விவாதங்களும், அரசியல் அமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரத்தின் அடிப்படையிலும், பல்வேறு மதத்தவரின் மத உணர்வுகளைப் புண்படுத்தாத வகையிலும் இடம்பெற வேண்டுமென்று கூறியுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.

திருமணம், திருமண முறிவு, சொத்துரிமை, தத்து எடுத்தல் போன்ற விவகாரங்களில், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் பார்சி மதத்தவர்க்கு வெவ்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால், சீக்கியர்கள், புத்தர்கள் மற்றும் ஜைனர்கள், இந்துக்களுக்குரிய சட்டங்களைப் பின்பற்றுகின்றனர். 

இந்தியாவில் அனைத்து குடிமக்களும், எந்த மதத்தையும் அறிக்கையிட்டு, அதனைப் பரப்புவதற்கு அரசியல் அமைப்பு அனுமதிக்கின்றது என்றும், இந்த அடிப்படை சுதந்திரத்தை எந்தச் சட்டமும் நீக்க முடியாது என்றும் கூறியுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.