2016-07-12 16:18:00

24 மணி நேரத்தில் 5 கோடி மரக்கன்றுகள் நட்டு சாதனை


ஜூலை,12,2016. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், ஒரே நாளில் ஐந்து கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசு முன்னெடுத்த இந்த நடவடிக்கையின்கீழ், இச்செவ்வாயன்று கான்பூர் நகரி‌ல் மட்டும் 6 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

கான்பூரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்கள், சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து நமது தலைமுறைகளைக் காக்க வேண்டுமென்றால், அதிகளவில் மரங்கள் வளர்க்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

உத்தர பிரதேச மாநில அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக வழங்கப்பட்ட பயனுள்ள பல்வேறு வகையான ஐந்து கோடி  மரக்கன்றுகளும், சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் இச்செவ்வாயன்று நடப்பட்டன.

கடந்த ஆண்டு பாரிசில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் இந்தியா கொடுத்த வாக்குறுதியின்படி, நாட்டின் 29 மாநிலங்களிலும் மரங்கள் நடுவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. நாட்டின் வனப்பகுதியை அதிகரிக்கும் நோக்கத்தையும் இது கொண்டிருக்கின்றது.

உத்தர பிரதேச மாநிலத்தில், கடந்த ஆண்டில், பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை, பத்து இடங்களில் நடுவதற்கு மாநில அரசு இலவசமாக அவற்றை விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.