2016-07-11 15:36:00

வாரம் ஓர் அலசல் – பிறருக்காக வாழ்வதுதானே உண்மை வாழ்வு


ஜூலை,11,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில், நம் வாழ்வு, நம்மையே மையம் கொண்டிருக்கக் கூடாது, ஆனால், அது இன்னல்களில் இருக்கும் பிறரை மையப்படுத்தியதாக அமைய வேண்டும் என்று சொன்னார். நல்ல சமாரியர் உவமை பற்றி விளக்கிய திருத்தந்தை மேலும் சொன்னார்...

“வாழ்வுப் பாதையில் நாம் சந்திக்கும் துன்புறுவோருக்கு உதவுவதாய் நம் வாழ்வு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட வாழ்வை நாம் தேர்ந்துகொள்கின்றோமா? அல்லது அதைப் புறக்கணிக்கின்றோமா? நம் மத நம்பிக்கை நல்ல பணிகளை ஆற்றச் செய்கின்றதா? அல்லது அந்நம்பிக்கை இறந்துபோனதாய், வளமற்றதாய் இருக்கின்றதா? இக்கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் இறுதி நாளில் இரக்கப் பணிகளை வைத்தே தீர்ப்பிடப்படுவோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களில், நாம் உதவி செய்தவர்கள் அல்லது நாம் புறக்கணித்தவர்களில், தாம் இருப்பதை, ஆண்டவர் நமக்கு நினைவுபடுத்துகின்றார். ஆண்டவர் சொல்கிறார் - எருசலேமிலிருந்து எரிக்கோ செல்லும் சாலையில், பாதி இறந்த நிலையில் கிடந்த மனிதர் நான்தான். தெருவில் நீங்கள் பார்த்த பசியாய் இருந்த குழந்தை நான்தான். பல நேரங்களில் அவர்கள் விரட்ட விரும்பிய புலம்பெயர்ந்த மனிதர் நான்தான். கைவிடப்பட்ட நிலையில் பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் தாத்தா பாட்டிகள் நான்தான். மருத்துவமனையில் யாருமே வந்து பார்க்காத நோயாளி நான்தான். துன்புறுவோர், கைவிடப்பட்டவர்... இவர்களுக்குச் செய்யும் உதவி ஆண்டவருக்கே செய்வதாகும். இப்படி ஆண்டவர் நம்மிடம் இறுதி நாளில் சொல்வார். நமக்கு அடுத்திருப்பவர்க்கு, அன்போடும் மகிழ்வோடும் நற்பணிகள் ஆற்றும்போது நம் மத நம்பிக்கை துளிர்விட்டு நற்கனிகளைத் தரும் என்று சொன்னார் திருத்தந்தை. உத்தரகாண்ட் மாநிலத்தின் உதம்சிங் நகரைச் சேர்ந்த 25 வயது நிரம்பிய முகம்மது யாசின், 26 வயது நிரம்பிய சாஜித் கான் ஆகிய இருவரும், தங்களின் நற்செயல்களால் உண்மையான மத நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இரு முஸ்லிம் இளைஞர்களும், உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷாஜஹான்பூரின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் துர்கை அம்மன் கோயில் சுவர்களில் சிற்ப வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பணி பற்றி முகம்மது யாசின் கூறுகையில், ‘கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தர பிரதேச மாநிலத்தின் பல கோயில்கள் மற்றும் மசூதிகளில் சிற்ப வேலைகள் செய்துள்ளோம். இந்த இரண்டுமே புனித இடங்கள் என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் எங்களுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மதத்தின் மீது மனிதர்களின் உணர்வுகள் ஒன்றியிருப்பதால் அவை எதுவாக இருந்தாலும் மதிப்பது, எங்கள் கடமையாகக் கருதுகிறோம். எங்கள் குர்ஆனில், குறிப்பிட்டுள்ளபடி யாரையும் புண்படுத்தாமல், மனித உணர்வுகளை மதித்து வருகிறோம்’ எனத் தெரிவித்தார்.

சிந்துத்தாய் சப்கல் (Sindhutai Sapkal) என்பவர், மகாராஷ்டிர மாநிலத்தின் வார்தா மாவட்டத்தின் பிம்ப்ரி மேகே கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில், தான் பெற்றெடுத்த ஒரு குழந்தையையே வளர்க்க முடியாமல் பிச்சை எடுத்தவர் இவர். ஆனால், கடந்த முப்பந்தைந்து ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து, பராமரித்து, படிக்க வைத்து, திருமணம் செய்துகொடுத்து, அவர்களுக்கு நிலையான வாழ்க்கைச் சூழலையும் உறுதிசெய்து தந்திருக்கிறார் இவர். அவர்களில் சிலர் இன்று, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, வழக்கறிஞர்களாக, சமூகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.

சிந்துத்தாய், 1948ம் ஆண்டில், வீட்டுக்கு வேண்டாத பெண் பிள்ளையாகப் பிறந்தார். நிந்திக்கப்பட்ட அந்தச் சிறுமி ‘சிந்தி’ அதாவது ‘கிழிந்த துணி’ என்ற பட்டப் பெயரால் எப்போதுமே கேலிசெய்யப்பட்டார். பத்து வயதில் முப்பது வயது ஆணுக்குத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். இருபது வயதில் முழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவரால் கொடூரமாக அடித்து வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். உடல் முழுக்கக் காயங்களோடு வீதியில் தடுமாறி நடந்த சிந்துத்தாய், வீட்டருகில் இருந்த மாட்டுத் தொழுவத்திலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தொப்புள்கொடியைக்கூட அறுத்தெடுக்க ஆளில்லாமல், பிறந்த குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு சில கிலோ மீட்டர்களை நடந்தே சென்று, தாய் வீட்டை அடைந்தார். ஆனால் அங்கும் நிராகரிக்கப்பட்டார். வேறு வழியின்றி வீதியில் கிடந்த ஒரு கூர்மையான கருங்கல்லால் தொப்புள் கொடியை அறுத்தெடுத்தார். இந்தச் சம்பவம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிந்துத்தாயை ஆழமாகப் பாதித்தது. மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் கைக்குழந்தையோடு உயிரை மாய்த்துக்கொள்ள மனமில்லை. பிழைக்க வழி தெரியாமல் பிச்சை எடுத்தார். பெண் பிள்ளையைக் கையில் ஏந்திப் பிச்சை எடுக்கும்போதுதான் தெருவோரம் பிச்சை எடுக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கண்ணில்பட்டன. அதில் பெரும்பாலான குழந்தைகள் அனாதைகள் என்பதும், சிலர் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இத்தனை காலம் இவர்களைக் கடந்து சென்றபோதெல்லாம் ஏற்படாத தவிப்பு அப்போது உண்டானது. தன்னுடையக் குழந்தைக்காக மட்டுமின்றி வீதியில் விடப்பட்ட பல குழந்தைகளுக்காகவும் பிச்சை எடுத்தார். நாளடைவில் அந்தக் குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்து ‘அனாதைகளின் தாய்’ என வாஞ்சையோடு அழைக்கப்படலானார். மற்ற குழந்தைகளுக்கு இடையில் தன் மகளை மட்டும் வீட்டில் வளர்ப்பது சுயநலம் எனக் கருதிப் சொந்த மகளையும் காப்பகத்திலேயே வளர்த்தார். தற்போது அவரும் வளர்ந்து, அனாதை இல்லம் ஒன்றைப் பராமரித்து வருகிறார். சிந்துத்தாய்க்கு தற்போது 207 மருமகன்கள், 36 மருமகள்கள் மற்றும் 1000-த்துக்கும் மேற்பட்ட பேரப் பிள்ளைகள் உள்ளனர். இன்றுவரை அவருக்கு அமைப்பு ரீதியான நிதி உதவிகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு வேளை உணவுக்கும் இன்றும் அவர் மக்களைச் சந்தித்துப் பேசி உதவி கோருகிறார். பல ஆண்டுகள் கழித்து அண்மையில் அவருடைய கணவர் தேடிவந்து தன்னுடைய தவறை உணர்ந்துவிட்டதாக மன்னிப்பு கேட்டார். எல்லாக் குழந்தைகளையும் அரவணைத்தே பழகிய சிந்துத்தாயின் மனம் கணவரையும் ஒரு குழந்தையாகப் பாவித்து ஏற்றுக்கொண்டது. 500-க்கும் மேற்பட்ட விருதுகள் அவரைத் தேடி வந்துள்ளன. அவரை கவுரவிக்கும் விதமாக எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவற்றை முழுவதுமாக, குழந்தை காப்பகங்களுக்காகப் பயன்படுத்துகிறார். ‘சிந்துத்தாய் சப்கல்’ என்கிற பெயரில் இதுவரை இவர் ஐந்து மையங்கள் நடத்திவருகிறார். சிந்துத்தாயால் வளர்க்கப்பட்ட ராசாதா ரோஷன், ‘ஏ ட்ரிபியூட் டூ சிந்துத்தாய் சப்கல்’ (‘A Tribute to Sindhutai Sapkal’) என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கினார். அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 2010-ல் எடுக்கப்பட்ட ‘மீ சிந்துத்தாய் சப்கல்’ என்கிற மராத்தி திரைப்படம் தேசிய விருதையும் வென்றது.(நன்றி : தி இந்து) 

அன்பர்களே, சிந்துத்தாய் சப்கல்’அவர்கள், பிறருக்காக வாழ்வதில்தான் வாழ்வின் உண்மையான அர்த்தம் உள்ளது என்பதை உணர்த்திவிட்டார். இதற்காக இவர், தன் மீது விழுந்த ஒவ்வொரு அடியையும் உறுதியுடன் எதிர்த்து நின்றார். மதத்தின் பெயரால் ஒவ்வொரு நாளும் பல அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், சிந்துத்தாய், முகம்மது யாசின், சாஜித் கான் ஆகிய மூவர்க்காக கடவுளுக்கு நன்றி சொல்வோம், கடவுளைப் போற்றுவோம்.

அன்பு நெஞ்சங்களே, மற்றவர்களுடன் அன்பாக இருப்பதற்கு யாரும் காரணம் தேடத் தேவையில்லை. தெருவோர மனிதர்களுக்கு, இன்னும் வாழ வேண்டிய மீதி வாழ்க்கை இருக்கிறது. கண்ணீரோடு இருப்பவர்களை, சிரிக்க வைப்பதுதான் இன்றைய உலகின் மிகப் பெரிய சவால். வாழ்வின் ஓரத்தில் இருப்பவர்களை நாம்தான் வாழ்க்கைக்குள் அழைக்க வேண்டும். ஆம். இந்த உலகில், தனக்கு என்று வாழ்வதைவிட பிறருக்காக வாழ்வதில்தான் ஆத்ம திருப்தி இருக்கின்றது. அதுதான் வாழ்வதன் உண்மையான அர்த்தமும்கூட. ஓய்வின்றி உழைத்துவரும் ஒரேயோர் உறுப்பு இதயமே. அது உங்களுடையதாக இருந்தாலும் சரி, பிறருடையதாக இருந்தாலும் சரி, அதனை எப்போதும் மகிழ்வோடு வைத்திருப்போம். வாழும் காலங்கள் யாவும் வாழ்வதற்கே. அவற்றை வாழ்ந்துதான் பார்ப்போமே, வாசம் வீசிடும் பூ போல!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.