2016-07-11 16:20:00

ஏழையாய், அகதியாய், உன்னிடம் வருபவன் நானே, என்பார் இயேசு


ஜூலை,11,2016. நல்ல சமாரியர் உவமையைப் படிக்கும் நாம் ஒவ்வொருவரும், நம் செயல்கள் குறித்தும், அயலவர் மீதான நம் கடமைகள் குறித்தும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்,.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான நல்ல சமாரியர் உவமை குறித்து நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மையல்ல, மாறாக, மற்றவரை மையமாகக் கொண்ட இந்த உவமை, நம் அயலவர் யார் என்ற கேள்வியை நம் முன் வைக்கின்றது, அவர்கள் நம் அன்புக்கு உரியவர்கள் மட்டும் அல்ல, நம் அன்பும் உதவியும் தேவைப்படுபவர்கள் என்றார்.

கோவிலில் பணிபுரியும் குருவும், லேவியரும் அடிபட்டிருந்தவரைக் கண்டும் பாராமுகமாகச் சென்றபோது, அம்மனிதருக்கு உதவ, ஒரு சமாரியரே, அதாவது, மதத்தை ஒழுக்காகக் கடைபிடிக்காதவர் என யூதர்களால் ஏளனமாகக் கருதப்பட்ட ஒருவரே இறுதியில் வந்து உதவுகிறார்  எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, அவரையே நமக்கு எடுத்துக்காட்டாகவும் இயேசு தருகிறார் என்றார்.

மற்றவர்களை அன்புகூர்ந்து, அவர்களுக்கு உதவியும், மகிழ்ச்சியும் அளிக்கும்போதுதான், நம் விசுவாசம், கனி தருவதாக மாறுகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எரிகோ செல்லும் பாதையில் குற்றுயிராகக் கிடந்த அந்த மனிதரும்  நானே, பசியால் உன்னைத்தேடி வந்த குழந்தையும், குடிபெயர்ந்தவரும், முதியோர் இல்லங்களில் விடப்படும் முதியோரும், ஏழை நோயாளியும் நானே என இயேசு நம்மைப் பார்த்து கூறும் நாள் வரும் எனவும், தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.