2016-07-11 16:11:00

எருசலேம் முதுபெரும் தந்தையின் பிரியாவிடை மடல்


ஜூலை,11,2016. இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து உழைத்தோம்; நல்லதொரு போராட்டத்தில் நாம் அனைவரும் ஈடுபட்டோம் என்று, எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, Fouad Twal அவர்கள் ஒரு மடலில் குறிப்பிட்டுள்ளார்.

எருசலேமின் முதுபெரும் தந்தையாக, கடந்த எட்டு ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெறும் முதுபெரும் தந்தை Twal அவர்கள், தன் மறைமாவட்டத்திற்கு எழுதியுள்ள இறுதி மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

பல்வேறு இடர்பாடுகள் நடுவில், இறைவன் தன்னை காத்து வந்ததற்காக நன்றி கூறும் முதுபெரும் தந்தை Twal அவர்கள், இனிவரும் நாட்களில், இறைவன் கரங்களிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கரங்களிலும் தன்னைக் கையளிப்பதாகக் கூறியுள்ளார்.

தன் மறைமாவட்ட அருள் பணியாளர்களுக்கு இம்மடல் வழியே சிறப்பான நன்றியைத் தெரிவித்துள்ள முதுபெரும் தந்தை Twal அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இரக்கத்தின் கருவிகளாகச் செயலாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல் நாடும், எருசலேம் நகரும் தன்னையே மறு பரிசீலனை செய்து, புதிதான முயற்சிகளைத் துவங்கவேண்டும் என்பதை உணரும் நாம், அதே மனப்பான்மையுடன் எருசலேம் மறைமாவட்டத்திலும் புதிய முயற்சிகளைத் துவக்க தயங்கக் கூடாது என்று, முதுபெரும் தந்தை Twal அவர்கள், விண்ணப்பித்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக புனித பூமியின் காவலராகப் பணியாற்றிய அருள்பணி Pierbattista Pizzaballa அவர்கள், எருசலேம் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்ற, அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று, முதுபெரும் தந்தை Twal அவர்கள், இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

எருசலேம் நகரின் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Twal அவர்கள், பணி ஓய்வு பெறவிழைந்து அனுப்பியிருந்த விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜுன் 24ம் தேதி ஏற்றுக் கொண்டதோடு, அருள்பணி Pizzaballa அவர்களை, அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.