2016-07-09 15:01:00

பாத்திமாவில் அன்னமரியா காட்சியின் 100ம் ஆண்டு


ஜூலை,09,2016. போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில் அன்னை மரியா காட்சி கொடுத்ததன் நூறாம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக நடைபெறவுள்ள உலக மரியியல் மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்துவதற்குத் தனது சிறப்பு பிரதிநிதி ஒருவரை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற செப்டம்பர் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை பாத்திமாவில் நடைபெறவுள்ள 24வது உலக மரியியல் மாநாட்டிற்கு, புனிதர்நிலை திருப்பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் José Saraiva Martins அவர்களைத் பிரதிநிதியாக நியமித்துள்ளார் திருத்தந்தை.

1917ம் ஆண்டு மே 13ம் தேதி, பத்து வயது லூசியா, ஒன்பது வயது பிரான்சிஸ், ஏழு வயது ஜசிந்தா ஆகிய மூன்று சிறார்க்கும் பாத்திமாவில் முதல்முறையாக காட்சி கொடுத்தார் அன்னை மரியா. அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபர் 13ம் தேதிவரை, அம்மூன்று சிறார்க்கும் ஆறு முறைகள் காட்சி கொடுத்தார் அன்னை. செபமாலை அன்னை என அழைக்கப்படும் இவர், ஏழாவது முறையாக, 1920ம் ஆண்டில் லூசியாவுக்குக் காட்சி கொடுத்தார்.

மேலும், பாத்திமாவில் அன்ன மரியாவைக் காட்சி கண்டவர்களில் ஒருவரான அருள்சகோதரி லூசியா, 2005ம் ஆண்டில் இறப்பதற்கு முன்னர், கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும் இடையே நடக்கும் இறுதிப்போர், திருமணம் மற்றும் குடும்பம் பற்றியதாக இருக்கும் என்று, முன்னறிவித்தார் என, கர்தினால் Carlo Caffarra அவர்கள் கூறியுள்ளார்.

தான் பொலோஞ்ஞா பேராயராகப் பணியாற்றியபோது, அருள்சகோதரி லூசியா, இந்த முன்னறிவிப்புக் கடிதத்தை தனக்கு அனுப்பியிருந்தார்    எனவும் தெரிவித்துள்ளார் கர்தினால் Caffarra.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.