2016-07-09 15:22:00

இரக்கத்தின் கலாச்சாரத்திற்கு மாற வேண்டுகோள்


ஜூலை,09,2016.            காட்டுமிராண்டித்தனம் மற்றும் பண்பாடற்ற செயல்களைக் கைவிட்டு, இரக்கத்தின் கலாச்சாரத்திற்கு நாம் மாற வேண்டுமென்று, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.

நாம் பிறரைச் சகித்துக்கொண்டு மன்னித்தால், கடவுளும் நம்மை மன்னிப்பார் எனவும், பயங்கரவாதம், வெறுப்பு மற்றும் தீவிரவாதத்தை முறியடிப்பதற்கு, இதுவே ஒரே வழியெனவும் கூறினார் முதுபெரும் தந்தை சாக்கோ.

பாக்தாத்தின், Karrada மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலில் பலியானவர்கள் நினைவாக, இவ்வெள்ளியன்று இடம்பெற்ற செப வழிபாட்டில் உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இவ்வாறு கூறினார். இத்தாக்குதலில் 292 பேர் இறந்தனர். மேலும், Baladலுள்ள ஷியா இஸ்லாம் பிரிவு புனித இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பேர் இறந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.

இத்தகைய குற்றங்கள், சமய விழுமியங்களைப் புறக்கணிக்கின்றன மற்றும் இவை, நாம் விண்ணகம் செல்வதற்குப் பதிலாக, நேரே நரகத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றன என்றும் கூறினார் முதுபெரும் தந்தை சாக்கோ.

இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் செபிக்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்களுடன் சேர்ந்து கிறிஸ்தவர்களும் செபிப்பதாகத் தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.