2016-07-08 15:18:00

கடல் ஞாயிறுக்கு ஜப்பான் ஆயர்களின் செய்தி


ஜூலை,08,2016. கடவுளின் படைப்பின் மிகச்சிறந்த கொடையாக அமைந்துள்ள கடல், மனிதரின் தன்னலத்திற்காக மாசுபடுத்தப்படக் கூடாது என்று, ஜப்பான் ஆயர்கள் கேட்டுள்ளனர்.

ஜூலை 10, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் கடல் ஞாயிறுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தவர் மற்றும் அகதிகள் ஆணையத் தலைவர் ஆயர் Michael Goro Matsuura அவர்கள், கடல் தொழிலாளர்கள், இயற்கையிடமிருந்து மட்டுமல்ல, மனிதரின் தன்னல நடவடிக்கைகளாலும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.

கடலில் நடத்தப்படும் அணுப் பரிசோதனைகள், கடலில் கொட்டப்படும்  கதிரியக்க மற்றும் பிற கழிவுகள் போன்றவற்றால், கடலின் சூழல் மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றது என்றும், இந்த ஆபத்துக்கள் பெரும்பாலும் ஊடகங்களால் அறிவிக்கப்படாமல் மறைக்கப்படுகின்றன என்றும் ஆயர் கூறியுள்ளார்.

கடலில் வேலைசெய்பவர்களும், கடல்வாழ் உயிரினங்களும், மனித நடவடிக்கைகளால் அச்சுறுத்தப்பட்டு, அழிவைச் சந்திக்கின்றனர் என்றுரைக்கும் ஆயர், கடல் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கப்படுமாறு கேட்டுள்ளார்.

நாம் எல்லாரும், ஒரே இறைத்தந்தையால் அன்புகூரப்படும் குழந்தைகள் என்ற உணர்வில், இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், ஒருவர் ஒருவரை அன்புகூரவும், கடல் தொழிலாளர்களுக்காகச் செபிக்கவும் வேண்டுமென ஜப்பான் ஆயரின் செய்தி கூறுகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.