2016-07-08 15:26:00

கடலோரப் பகுதிகளில் அரிப்பைத் தடுக்க பாதுகாப்புத் திட்டம்


ஜூலை,08,2016. தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்க ‘விரிவான கடற்கரைப் பாதுகாப்பு மேலாண்மைத் திட்டம்’ஒன்றை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை உருவாக்கி வருகிறது.

தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை 1,076 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இப்பகுதிகளில், சரக்கு மற்றும் மீன்பிடி துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கடலோரங்களில் இயற்கையாக மணல் இடம் பெயர்வதில் பாதிப்பு ஏற்பட்டு கடல் அரிப்பு ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடல் அரிப்பு ஏற்படுவதால், கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் கடல் அரிப்பைத் தடுத்து மீனவர்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்க, பொதுப்பணித்துறை சார்பில் கடல் அரிப்பு தடுப்பான்கள் அமைப்பது, சுவர்களை எழுப்புவது, கற்களைக் கொட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட பகுதிகளில் கடலரிப்பு இல்லாவிட்டாலும், பிற பகுதிகளில் கடல் அரிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. கடந்த மாதம் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் 27 வீடுகள், கடல் அரிப்பால் சேதமடைந்துள்ளன. வீடுகளுக்குள் புகும் அளவுக்கு கடல் அலைகளின் வேகம் இருந்தது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறும்போது, “இத்தனை ஆண்டுகளில் இதுபோன்று அலைகளும், கடல் அரிப்பும் சீனிவாசபுரத்தில் ஏற்பட்டதில்லை” என்று தெரிவித்தனர்.

மேலும், இந்தியாவின் 8,414 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் ஏறத்தாழ 45 விழுக்காட்டுப் பகுதி கடல் அரிப்பால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது.

ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.