2016-07-08 15:33:00

உலகளவில், மீன் உணவாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


ஜூலை,08,2016. உலகளவில், மீனை உணவாகக் கொள்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொருவரும் சராசரியாக, இருபது கிலோ கிராம் மீனை உண்ணும் நிலை முதல்முறையாக உயர்ந்துள்ளது என்று, ஐ.நா. நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், நீர் வேளாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், மீன்கள் வீணாக்கப்படுவது குறைந்திருப்பதுமே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.

எனினும், அளவுக்கு அதிகமாக மீன்கள் பிடிக்கப்படுவதால், கடலின் இயற்கை வளங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன என்றும் கூறும் அவ்வறிக்கை, உலகில் ஒவ்வொரு மனிதரும் உட்கொள்ளும் மீனின் அளவு, ஆண்டுக்கு, இருபது கிலோ கிராமுக்கு அதிகமாகியுள்ளது என்றும் கூறியது.

2014ம் ஆண்டில் மக்கள் உண்ட மீனின் அளவு, 13 கோடியே 60 இலட்சம் டன்களாக இருந்தது, இது, 2016ம் ஆண்டில் 14 கோடியே 60 இலட்சம் டன்களாக அதிகரித்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறியது.

உலகில் ஏறத்தாழ 5 கோடியே 70 இலட்சம் பேர், முதல்கட்ட மீன் உற்பத்தித் துறையில் உள்ளனர் என்றும், உலகளவில், 1976ம் ஆண்டில் 800 கோடி டாலர் பெறுமான மீன் ஏற்றுமதி இருந்தது, ஆனால், இது 2014ம் ஆண்டில், 14,800 கோடி டாலரை எட்டியுள்ளது என்றும் FAO அறிக்கை கூறியது.

மனிதர் உண்ணும் உணவில் உள்ள புரோட்டின் புரதச்சத்தில் 6.7 விழுக்காட்டு அளவு மீனில் உள்ளது. 

நீர் வேளாண்மை என்பது, கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்ற கடல்வாழ் விலங்குகள் மற்றும் கடல் பாசிகளான நீர்வாழ் தாவரங்களை உள்ளடக்கிய நீர் வாழ் உயிரினங்களை வேளாண்மை செய்வதாகும்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.