2016-07-07 15:49:00

சென்னை மருத்துவமனையில் 30,000 குடிநோயாளிக்கு சிகிச்சை


ஜூலை,07,2016. அடையாறு இந்திரா நகரில் உள்ள டி.டி.கே மருத்துவமனையில் குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 30,000 பேர் பயனடைந்துள்ளதாக மருத்துவமனையின் மனநல ஆலோசகர் சுதாமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கைக் கொணரும் நோக்கத்தில், மதுக் கடைகளை மூடுவது மற்றும் நேரத்தை குறைப்பது எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு குடி நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டியதும் முக்கியம் என்று சுதாமணி அவர்கள் கூறினார்.

சென்னை அடையாறு இந்திரா நகரில் டி.டி.கே மருத்துவமனை கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அனுபவமிக்க மருத்துவக் குழு, மற்றும் மன நல ஆலோசகர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு, கடந்த 36 ஆண்டுகளாக, குடி நோயாளி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டி.டி.கே. மருத்துவ மனை, கடந்த 27 ஆண்டுகளாக சென்னையில் மட்டுமல்லாது, தமிழகத்தில் ஆண்டுக்கு 6 கிராமங்களில் இலவச குடி நோய் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறது.

இம்மருத்துவமனையின் வழியே இதுவரை 30,000 குடி நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என்று மனநல ஆலோசகர் சுதாமணி அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.