2016-07-07 15:24:00

இது இரக்கத்தின் காலம்:இன்சொல், பேசுபவர்க்கே முதலில் இனிமை


அந்தப் பெரியவர் வீட்டு வாசலில், சிறுவர் பட்டாளம் விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரே கூச்சல். விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொஞ்சம் உயரமாகத் தோற்றமளித்த ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான். பாவம் அந்தச் சிறுவன், அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடினான். அவனைத் திட்டி விரட்டி விட்ட வெற்றிக் களிப்பு இவன் முகத்தில். ஆட்டம் கலைந்தது. எல்லாரும் வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தனர். இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர், திட்டிய அந்தச் சிறுவனைத் தன் வீட்டுக்கு அழைத்து உட்கார வைத்தார். அவன் எதிரில் ஒரு தட்டு, அதில் இரண்டு மாம்பழங்கள், நான்கு மாங்காய்கள். பெரியவர் சொன்னார், தம்பி நீ நன்றாக விளையாடினாய், அதற்குப் பரிசு இது, எடுத்து சாப்பிடு என்றார். அவன் ஆவலோடு மாம்பழங்களை எடுத்து உண்டான். பின்பு அந்தப் பெரியவருக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்படத் தயாரானான். அவனைத் தடுத்தப் பெரியவர், தட்டில் மீதமிருப்பதையும் சாப்பிடலாமே என்றார். அவை எனக்கு வேண்டாம் அய்யா என்றான் சிறுவன். ஏன்? அவை காய்கள். காய்கள் என்றால் சாப்பிடக் கூடாதா? என்றார் பெரியவர். அவை கசக்கும். இல்லையெனில் புளிக்கும் என்றான் சிறுவன். பரவாய் இல்லை தின்று பாரேன் என்றார் பெரியவர். இல்லை அய்யா, அந்தச் சுவையை என் உள்ளம் ஏற்காது என்றான் சிறுவன். உன் உள்ளம் விரும்புவதை மட்டும் ஏற்கும் நீ.. அடுத்தவர் உள்ளம் விரும்பாததை, நீ, விரும்புகின்றவரைக்கும் கொடுக்கின்றாயே, அது நியாயமா? என்றார் பெரியவர். நானா? புரியவில்லை அய்யா? என்று சிறுவன் சொன்னதும், சற்றுமுன் ஒரு சிறுவனை வாயில் வந்தபடி திட்டி அழ வைத்தாயே. உன் சொற்களை அவனுடைய உள்ளம் உவகையுடன் ஏற்றதா? என்றார் பெரியவர். இல்லை அய்யா. துன்பம் தந்திருக்கும். அதனால் அவன் அழுதான் என்றான் சிறுவன். நீ மட்டும் உன் உள்ளம் விரும்பாத காய்களை ஒதுக்குவாய், ஆனால் பிறர் உள்ளம் ஏற்க விரும்பாத சுடு சொற்களை அள்ளி வீசுவாய் என்றார் பெரியவர். தம்பி உனக்கு கோபம் வந்தால் சுடு சொற்களை வீச வேண்டும் என்பதில்லை. உன்னிடம் எவ்வளவோ நச்சுத் தன்மையற்ற இனிய சொற்கள் இருக்கின்றனவே, அவைகளை வீசி அந்தப் பையனின் தவறைச் சுட்டிக் காட்டி, தலை குனிய வைத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு காயை வீசி அவன் உள்ளத்தைக் காயப்படுத்தி விட்டாயே என்றார் பெரியவர். தன் தவறை உணர்ந்த அவன் தலைகுனிந்து நின்றான்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.