2016-07-06 16:12:00

திருத்தந்தை - உடன் பிறப்பு உணர்விற்கு நீங்கள் சாட்சிகள்


ஜூலை,06,2016. நாம் எந்நிலையில் இருந்தாலும், நம்மை வரவேற்று, உபசரிக்க இயேசு காத்திருக்கிறார். அவரே உங்களை இங்கு அழைத்து வந்துள்ளார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்ஸ் நாட்டிலிருந்து தன்னைக் காண வந்திருந்த திருப்பயணிகளிடம் கூறினார்.

பிரான்ஸ் நாட்டின் லியோன் (Lyon) பகுதி மறைமாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் அதிகமான வறியோர், உரோம் நகருக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின் ஒரு பகுதியாக, இப்புதன் காலை வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தையைச் சந்தித்த வேளையில் அவர் இவ்விதம் கூறினார்.

நீங்கள் மேற்கொண்டுள்ள இத்திருப்பயணத்தின் வழியே, நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் உடன் பிறப்பு உணர்விற்கு நீங்கள் அனைவரும் சாட்சி பகர்ந்துள்ளீர்கள் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

வறியோரே திருஅவையின் சொத்து என்று தியாக்கோனான புனித இலாரன்ஸ் கூறியதுபோல், இத்திருப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்த ATD Fourth World என்ற அமைப்பின் நிறுவனரான அருள்பணி Joseph Wresinski அவர்களும் வறியோரை, திருஅவையின் இதயம் என்று அழைத்துள்ளார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அனைவருக்கும் மாண்பு என்ற அடிப்படை கொள்கையுடன் உருவாக்கப்பட்டுள்ள ATD (All Together in Dignity) Fourth World என்ற அமைப்பைச் சார்ந்த அனைவரும், கிறிஸ்தவ வாழ்வு ஏட்டளவில் அல்ல, வாழ்வில் காட்டப்பட வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர் என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் நடைபெற்ற இந்த சந்திப்பின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரெஞ்சு மொழியில் செபங்களைக் கூறி, தன் இறுதி ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.