2016-07-05 16:12:00

திருத்தந்தை : சிரியாவில் அமைதி இயலக்கூடியதே


ஜூலை,05,2016. அன்புக்குரிய சிரியா நாட்டில், அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு இச்செவ்வாயன்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிரியாவில் அமைதியைக் கொணர்வதற்கு அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கைக்குக் காணொளிச் செய்தி வழியாகப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐந்தாவது ஆண்டாக சண்டை இடம்பெறும் சிரியாவில், மக்கள் வார்த்தையால் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்று கவலை தெரிவித்தார்.

ஒருபக்கம் மக்கள் துன்புறுகின்றனர், மறுபக்கம் போரிடுபவர்களுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதற்கென, நம்பமுடியாத அளவுக்குப் பணம் செலவழிக்கப்படுக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, அமைதி பற்றிப் பேசும் நாடுகளில் சில, ஆயுதங்களை விநியோகிக்கும் நாடுகளாகவும் உள்ளன என்றும், தனது வலது கையால் உங்களை அரவணைத்துக்கொண்டு, இடது கையால் உங்களைத் தாக்குபவரை எப்படி நம்ப முடியும் என்றும் கேட்டுள்ளார்.

குழுக்கள், பங்குத்தளங்கள் மற்றும் சமூகங்கள், சிரியாவில் அமைதி, ஒற்றுமை மற்றும் நம்பிக்கைச் செய்தியைப் பரப்புவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், அனைத்துலக காரித்தாஸ் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளதைக் குறிப்பிட்ட  திருத்தந்தை, சிரியாவில் அமைதி இயலக்கூடியதே என்பதை உறுதி செய்து, அதற்காக முயற்சிக்குமாறு உலக சமுதாயத்தை வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவின் அமைதிக்கு, எந்த இராணுவத் தீர்வும் கிடையாது, ஆனால், அரசியல் முறையில் மட்டுமே தீர்வு உண்டு என்பதை அனைவரும் ஏற்று, ஒற்றுமையை உருவாக்கும் அரசை அமைப்பதை நோக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உலக சமுதாயம் ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

அமைதி ஒப்பந்தகளை உண்மையாகவே ஏற்று, மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு வழிசெய்யப்படுமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.