2016-07-05 16:34:00

இஸ்ரேல் குடியிருப்புத் திட்டத்திற்கு ஐ.நா. கண்டனம்


ஜூலை,05,2016. புனித பூமியில் மேற்குக் கரை மற்றும் கிழக்கு எருசலேமில் பாலஸ்தீனியர் வீடுகளை இடித்து, தன் மக்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

இரு நாடுகள் தீர்வு ஏற்கனவே நழுவிச் செல்லும் நிலையில், மேற்குக் கரையில் ஏறக்குறைய 500 வீடுகளும், கிழக்கு எருசலேமில் 240 வீடுகளும் கட்டும் இஸ்ரேலின் திட்டத்திற்கு, பான் கி மூன் அவர்கள் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் என, ஐ.நா. பொதுச் செயலரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகள் தீர்வுக்குத் தடங்கலாய் அமைந்துள்ள கூறுகள் அகற்றப்படுமாறு, மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் Quartet என்ற குழு, கடந்த வாரத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நான்கு நாள்களுக்குள் இஸ்ரேல் தனது திட்டத்தை அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது என்றும் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

இரஷ்ய கூட்டமைப்பு, அமெரிக்க ஐக்கிய நாடு, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகிய நான்கும்தான் Quartet குழுவாகும்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.