2016-07-04 13:12:00

வாரம் ஓர் அலசல் – வாழ்க்கை இனிது, எப்போது?


ஜூலை,04,2016. வாழ்க்கை ஒரு சவால், அதனைச் சாதியுங்கள். வாழ்க்கை ஒரு பரிசு, அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு சாகசப்பயணம், அதனை மேற்கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு துயரம், அதனை தாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு கடமை, அதனை நிறைவேற்றுங்கள். வாழ்க்கை ஒரு வினோதம், அதனைக் கண்டறியுங்கள். வாழ்க்கை ஒரு பாடல், அதனைப் பாடுங்கள். வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம், அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு பயணம், அதனை முடித்துவிடுங்கள். வாழ்க்கை ஓர் உறுதிமொழி, அதனை நிறைவேற்றுங்கள். வாழ்க்கை ஒரு காதல், அதனை அனுபவியுங்கள். வாழ்க்கை ஓர் அழகு, அதனை ஆராதியுங்கள். வாழ்க்கை ஓர் உணர்வு, அதனை உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு போராட்டம், அதனை எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு குழப்பம், அதற்கு விடை காணுங்கள். வாழ்க்கை ஓர் இலக்கு, அதனை எட்டிப் பிடியுங்கள். இப்படி வாழ்க்கை பற்றி பல கோணங்களில் சொல்கிறது பகவத்கீதை. சாதனையும், சவாலும், வேதனையும், மகிழ்வும் நிறைந்த இந்த வாழ்க்கை, நம் ஒவ்வொருவரையும் பார்த்து, போகும்போதே என்னை இரசித்துக்கொண்டே போ, ஏனென்றால் நான் உனக்காகத் திரும்பி வரமாட்டேன் என்று சொல்கிறது. நாம் வாழ்வது ஒருமுறைதான், ஒரேயொருமுறைதான். இந்த வாழ்வு நீளமானதாய் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை, ஆனால் சிறப்பானதாய் இருக்க வேண்டுமென்றார் டாக்டர் அம்பேத்கார். அன்பர்களே, கடந்த வாரத்தில் சமூக ஊடகங்களில், இறந்துகொண்டிருந்த ஓர் அருள்சகோதரியின் புகைப்படம் ஒன்று, வைரஸ் ஆகப் பரவியது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டீனாவின் Santa Fe நகரில், புனிதர்கள் தெரேசா மற்றும் யோசேப்பு ஆதீனத்தில் வாழ்ந்தவர் அருள்சகோதரி செசிலீயா மரியா. தனது 26வது வயதில் செவிலியர் படிப்பை முடித்து பட்டம் பெற்ற இச்சகோதரி, காலணி அணியாத கர்மேல் சபையில் சேர்ந்து, 2003ம் ஆண்டில் தனது நிரந்தர அர்ப்பண வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தார். இவர், தனது துறவு மடத்தில் வாழ்ந்த காலங்களில் வயலின் இசைக்கருவியை இனிமையாக மீட்டுபவர். அவரது இனிய குரலும், புன்னகை தவழும் முகமும் பலரைக் கவர்ந்திருந்தன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், நாக்குப் புற்றுநோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது நுரையீரல் வரை பரவியிருந்தது. நோய் முற்றிய நிலையில் கடந்த சில வாரங்கள் மருத்துவமனையில் இவர் சேர்க்கப்பட்டார். ஆனால் எந்நேரத்திலும், செபம் செய்வதை மட்டும்  அவர் நிறுத்தியதே கிடையாது. கடவுளைச் சந்திக்கும் நேரம் நெருங்கி வருவதை உணர்ந்து, தனது வேதனைகளை கடவுளுக்கு அர்ப்பணித்தார். அவர் ஒரு தாளில் தனது கடைசி விருப்பத்தை இப்படி எழுதி வைத்துள்ளார்.

எனது அடக்கச்சடங்கு சில உருக்கமான செபங்களால் நிறைந்திருக்க வேண்டும். பின்னர், அது எல்லாருக்கும் ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்க வேண்டும். செபிப்பதற்கு மறக்க வேண்டாம். அதேநேரம், கொண்டாடுவதற்கும் மறக்க வேண்டாம்.

அருள்சகோதரி செசிலீயா மரியா அவர்கள், கடந்த ஜூன் 23ம் தேதி காலையில், தனது 42வது வயதில் இறைபதம் அடைந்தார். அவரது உயிர் பிரிந்து கொண்டிருந்தபோது, அவரது முகம் ஒருவிதப் புன்னகையுடன் அமைதியாக இருந்துள்ளது. பல மாதங்கள் புற்றுநோயின் கடும் வேதனையை அனுபவித்திருந்தாலும், அவர் இறந்தபோது அது பற்றிய ஒரு சுவடே தெரியவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது நமக்கும் அப்படித்தான் தெரிகிறது. அப்படி புன்னகை நிறைந்த முகம் அது.

அன்பு நெஞ்சங்களே, புன்னகை ததும்பம் முகத்துடன் இறந்த அருள்சகோதரி செசிலீயா மரியா அவர்களின் வாழ்வின் இரகசியம் என்ன? இவர் வாழ்வை எப்படி வாழ்ந்தார்? இவருக்கு வாழ்வு எப்படி இருந்தது? கவியரசர் கண்ணதாசன் சொன்னார் – உலகில் மனிதர்கள் பெறும் புகழ் இருவகைப்படும். ஒன்று பெற்றுச் சாவது. இன்னொன்று செத்துப் பெறுவது. சரித்திரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பெற்றுச் செத்தவர்கள். கோடிக்கணக்கானவர்கள், செத்துப் பெற்றவர்கள் என்று. அருள்சகோதரி செசிலீயா மரியா, இந்த இருவகையிலும் உள்ளவர் போன்று தெரிகின்றது. இவரின் இறப்பை அறிவித்த அச்சபை சகோதரி ஒருவர், இயேசுவே, எம் அருமைச் சகோதரி பற்றி இருவரிகளை மட்டும் நீர் அறியத் தருகிறேன். இவர் எப்போதும் மகிழ்வோடு இருந்தார், தன்னை தனது விண்ணக மணவாளருக்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தார் என்று சொல்லியுள்ளார். அன்பர்களே, சகோதரி மரியா வாழ்வு எப்பொழுதும் மகிழ்வாக இருந்தது. நோயின் கடும் வேதனையும் அவரின் மகிழ்வைப் பறிக்கவில்லை. அந்த அளவுக்கு அவர் கடவுளில் வாழ்ந்தார். அன்பர்களே, வாழ்வில் துன்பங்கள், நோய்கள் யாருக்குத்தான் இல்லை. இந்த நாள்களில் தமிழ் ஊடகங்களில், இளம் மென்பொறியியலாளர் சுவாதி பற்றிய செய்திகளே நிறைந்திருக்கின்றன. சுவாதியின் பெற்றோர் விசாரணை, சுவாதியைக் கொன்ற ராம்குமார், அவரது பெற்றோர் விசாரணை எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. இஞ்ஞாயிறு பன்னாட்டு ஊடகங்களில், பாக்தாத், டாக்கா, நியுயார்க் நகரங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் பற்றிய செய்திகள் வெளியாயின. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. ஈராக் அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கிறது. இத்தாக்குதல்களில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து செபித்தார். இப்பூமியில், மனித மாண்பையும், மனித வாழ்வையும் மதிக்காதவர்களால் ஒவ்வொரு நாளும் எத்தனையோ அப்பாவி மக்கள் துன்பம் அனுபவித்து வருகின்றனர். ஆக, வாழ்வில் யாருக்குத்தான் துன்பம் இல்லை? அதனால்தான் சொல்கிறார்கள் – சிரிப்பவர்கள் எல்லாம் கவலையே இல்லாதவர்கள் இல்லை, கவலையை மறக்கத் தெரிந்தவர்கள், அவ்வளவுதான் என்று.

அலைகளில்லாத கடலுமில்லை, அழிவு இல்லாத புயலுமில்லை. அதுபோலத்தான், பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையும். வாழ்வில் எதிர்நீச்சல் போடத்திறனற்றவர்கள் வாழவே தகுதியற்றவர்கள் என்று சொல்லலாம். காரணம், அவர்களின் கோழைத்தனத்தால் தனக்குத்தானே வறுமையை நிரந்தரமாக்கிக் கொள்பவர்கள். நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நம்மைப் போலவே ஓராயிரம் பிரச்சனைகள் இருக்கும். எனவே, முடிந்தவரை புன்னகையையாவது பரிமாறிக்கொள்வோமே.

மதுரை மாவட்டம் மேலுார் வட்டத்தில் உள்ளது அரிட்டாபட்டி. இது, ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோவிலும், இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த சமணர் படுக்கைகளும் என்று, பழங்காலப் புகழ் கொண்ட இடமாகும். இவ்வளவு அரிதான வரலாற்றுப் புகழ் மிக்க இடத்தை பார்க்கவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சிரமம் உண்டு. கண்மாய்க்குள் இறங்கி நடந்துதான் போகவேண்டும். தண்ணீர் இருக்கும் காலத்தில் போவதற்கு மிகவும் சிரமம், வெளிநாடுகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஆர்வமாக வருபவர்கள் கரை வரை வந்துவிட்டு அதற்கு மேல் போக முடியாமல் சோகத்துடன் திரும்பிச்செல்வர். ஒரு முன்னுாறு மீட்டர் துாரம் கரையைப் பலப்படுத்திவிட்டால் போதும், எளிதில் நடந்தும், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் குடைவரை கோவில் வரை போய்வரலாம். ஆனால் இந்தக் கரையை யார் பலப்படுத்துவது என்றவுடன், நாமே பலப்படுத்துவோம் என்று ஊர்மக்கள் ஒன்று கூடினர். இதற்கான ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்தான் ரமேஷ். இவர் இந்தப் பகுதியில் சக நண்பரும் ஆசிரியருமான பாண்டியராஜ் என்பவருடன் சேர்ந்து நானுாறுக்கும் அதிகமான மரங்களை நட்டிருக்கிறார். இந்த மரங்கள் முழுவதும் பறவைகளுக்குப் பசியாற உதவும் ஆலமரம், அரசமரம், நாவல்மரம், அத்திமரம் போன்றவைகளாகும். தனது வருமானத்தில் ஐந்து விழுக்காடு ஒதுக்கி மரக்கன்றுகள் வாங்கி விடுவார். பின், அதைத் தண்ணீர் ஊற்றி பராமரிப்பதற்காக சனி, ஞாயிறு நாட்கள் முழுவதும் குடம் குடமாய் தண்ணீர் சுமப்பார். இதன் காரணமாக வெட்டவெளியாக வெயில் காய்ந்து கிடந்த இடங்கள் எல்லாம் இப்போது மரங்கள் வளர்ந்து சோலையாக காட்சி தருகின்றன. இப்போது கண்மாய்க் கரை தொன்னுாறு விழுக்காடு  பலப்பட்டுவிட்டது. இன்னும் பத்து விழுக்காடு வேலை முடிந்தால் போதும். பொதுமக்கள் சிரமமின்றி குடைவரைக் கோவில் வரை போய் வரலாம். எவ்வித எதிர்பார்ப்புமின்றி, பொதுநலன் கருதி செயல்பட்டு வருகிறார் ரமேஷ்.

வாழ்வில், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, நம்மால் இயன்ற நல்லதைச் செய்து வந்தால், அந்த வாழ்வில் ஒரு தனி சுகம் இருக்கும். வாழ்வு இனிதாக அமையும். இசைக்கவி ரமணன் அவர்கள், தி இந்து நாளிதழில் பேசியிருப்பதைக் கேளுங்கள்.  

அன்பு இதயங்களே, கடலில் இருக்கும் அவ்வளவு நீரும் ஒன்று சேர்ந்தாலும் ஒரு கப்பலைக் கவிழ்க்க முடியாது, கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம். அதுபோல் வாழ்வில் எந்தப் பிரச்சனையும் உங்களைப் பாதிக்காது, நீங்கள் அதை அனுமதித்தால் தவிர.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.