2016-07-04 14:36:00

டாக்காவிலும், பாக்தாத்திலும் உயிரிழந்தோருக்கு அனுதாபம்


ஜூலை,04,2016. டாக்காவிலும், பாக்தாத்திலும் நடைபெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தோருடனும், அவர்களது குடும்பத்தினரோடும் நாம் ஒருங்கிணைவோம் என்ற அழைப்பை விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 3, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில் இந்த விண்ணப்பத்தை வெளியிட்டபோது, வெறுப்பினால், உள்ளத்தின் பார்வைத்திறனை இழந்துள்ளோருக்காக செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கடவுளுக்கும், மனித குலத்திற்கும் எதிராக நடைபெறும் அனைத்து வன்முறைகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்த வன்முறையில் உயிரிழந்தோருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவிப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

மேலும், புனித மரிய கொரெட்டியின் திருநாள், வருகிற புதனன்று கொண்டாடப்படுவதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைக் கொலை செய்தவரை, தன் மரணத்திற்கு முன் மன்னித்ததை சிறப்பாகக் குறிப்பிட்டு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோரை, கரவொலி எழுப்பி, இளம்பெண் கொரெட்டிக்குப் பாராட்டுத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலியைக் கொண்டாட உரோம் நகருக்கு வருகை தந்துள்ள திருப்பயணிகளை மூவேளை செப உரையின் இறுதியில் வாழ்த்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக செபிக்கும்படி அனைவரிடமும் கேட்டுக் கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.