2016-07-02 13:35:00

பொதுக்காலம் - 14ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


வாழ்வுப் பாடங்களை சொல்லித் தருவதில் கதைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு என்பதை மறுக்க இயலாது. அத்தகைய ஒரு கதை இது.... ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இணைந்து அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தனர். அவ்வழியேச் சென்ற ஒருவர், அங்கு நடந்த பணிகளை ஆர்வத்தோடு பார்த்தார். மரக்கட்டைகளைக் கொண்டு அழகிய வேலைப்பாடுகள் செய்து கொண்டிருந்த ஒருவரிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். "தச்சு வேலை செய்கிறேன்" என்று ஆர்வமற்றதோர் பதில் வந்தது, அவரிடமிருந்து. கல்லில் அழகிய சிற்பம் ஒன்றை வடித்துக்கொண்டிருந்த சிற்பியிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "பார்த்தால் தெரியவில்லையா? கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று சலிப்புடன் பதில் சொன்னார், அந்தச் சிற்பி. அடுத்து, உண்மையிலேயே கல் உடைத்துக் கொண்டிருந்த ஒருவரிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, அவர் தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, "நான் ஓர் அரண்மனையைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அத்தொழிலைப்பற்றி ஒருவர் கொண்டிருக்கும் கண்ணோட்டம், உயர்வானதாக இருந்தால், செய்யும் தொழில் உயர்வடையும். தாழ்ந்ததென நாம் கருதும் தொழில்களைச் செய்பவர்கள், பல நேரங்களில், அத்தொழிலில் காட்டும் ஈடுபாடு, நம்மைப் பிரமிக்கவைக்கும். உணவகங்களில், மேசைகளைத் துடைக்கும் ஒருசிலர், அந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்வதைப் பார்க்கும்போது, ஏதோ அவர்கள்தான் அந்த உணவகத்தை நடத்துபவர்கள் போல் தெரியும்.

செய்யும் தொழிலைப் பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு நம்மை அழைக்கிறது. சென்ற வாரம் அழைப்பு. இந்த வாரம் உழைப்பு. சென்ற ஞாயிறு, நம் தலைவன் இயேசு தரும் அழைப்பைப்பற்றி சிந்தித்தோம். இந்த ஞாயிறு, அந்த அழைப்பை ஏற்பதால், மேற்கொள்ள வேண்டிய உழைப்பைப்பற்றி சிந்திப்போம். இந்த உழைப்பு எவ்வகையில் அமையவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியில் இயேசு தெளிவுபடுத்தியுள்ளார்.

லூக்கா நற்செய்தி 10: 1-5

அக்காலத்தில், இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள்.

“அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு” என்று, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளில் நாம் வாசிக்கிறோம். பொதுவாக, இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, தேவ அழைத்தலுக்கு வேண்டும்படி சொல்வோம். ‘தேவ அழைத்தல்’ என்றதும், குருக்கள், துறவறத்தார் என்ற குறுகிய கண்ணோட்டம் நம் மனதில் எழுகிறது. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளை ஆய்வு செய்தால், இயேசு, 72 பேரை புதிதாக நியமித்து, தன் பணிக்கென அனுப்பினார் என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

இயேசுவுடன் வாழ்ந்த பன்னிருத் திருத்தூதர்கள், ஏனைய 72 சீடர்கள் அனைவருமே குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள்தான். எனவே, “அறுவடைக்கு வேலையாள்கள் தேவை” என்று இயேசு கூறியது, குருக்கள், துறவியரைக் குறித்து மட்டும் அல்ல. மாறாக, மக்களின் மனங்களில் இறையரசின் கனவுகளை விதைத்து, அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு துணிவுடன் முன் வரும் அத்தனை வேலையாள்களையும் நினைத்தே இயேசு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

‘அறுவடைக்கு வேலையாள்கள் தேவை’ என்ற அழைப்பை ஓர் உருவகமாகச் சிந்திக்க முயல்வோம். அறுவடை செய்வது ஒரு தனிப்பட்டக் கலை... ஓ, இது என்ன பெரிய கலை? பயிர் வளர்ந்துள்ளது, கையில் அரிவாளை எடுத்து, அறுத்துத் தள்ளவேண்டியதுதானே என்ற ஏளன எண்ணங்கள் ஒரு சிலர் மனங்களில் எழலாம். இப்படி நினைப்பவர்களைப் பார்த்து, நாம் பரிதாபப்பட வேண்டும். அனைத்தும் இயந்திரமயமாகிவிட்ட காலத்தில் வாழும் நாம், அறுவடை செய்யும் கலையில் உள்ள நுணுக்கங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறுவடை செய்வதைப்பற்றி ஏளன எண்ணங்கள் கொண்டிருப்போரின் கையில் அரிவாளைக் கொடுத்து, வயலில் இறங்கி, அறுவடை செய்யச் சொன்னால் தெரியும்... வெட்டப்படுவது கதிர்களா? கைவிரல்களா? என்று...

மீண்டும் சொல்கிறேன். அறுவடை செய்வது ஒரு தனிப்பட்டக் கலை. அறுவடை செய்பவர்கள், தனித்துச் செயல்படுவதில்லை. எல்லாரும் சேர்ந்து, ஒரே வரிசையில், அறுத்தபடியே முன்னேறுவர். குனிந்து அறுவடை செய்யும்போது ஏற்படும் உடல் வலிகளை மறக்க, அவர்கள் பாடல்கள் பாடுவதும் உண்டு. சேர்ந்து உழைப்பது, உடல் வேதனைகளை மறந்து, முழு ஈடுபாட்டுடன் உழைப்பது என்று, அறுவடை செய்பவர்களிடம் இருந்து பல பாடங்கள் படித்துக் கொள்ள வேண்டும்.

இறையரசின் கனவுகளை விதைக்க, பலன்களை அறுவடை செய்ய, தனித் திறமைகள் பெற்றிருக்க வேண்டும். அதேநேரத்தில், பிறரோடு இணைந்து உழைக்கும் திறமையும் பெற்றிருக்க வேண்டும். இத்தகையத் திறமையுடையவர்களை மனதில் வைத்தே, இயேசு தன் அறுவடைக்கு வேலையாள்கள் வேண்டும் என்று கேட்கிறார். இறையரசுக்காக உழைப்பவர்கள் பெற்றிருக்கவேண்டிய திறமைகளை, இன்றைய நற்செய்தியில், ஒரு சில நிபந்தனைகளாகச் சொல்கிறார் இயேசு.

முதல் நிபந்தனை: "ஓநாய்களிடையே செல்லக்கூடிய ஆட்டுக்குட்டிகள்" இயேசுவுக்குத் தேவை. ஆடுகள் அல்ல, ஆட்டுக்குட்டிகள். ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதா? இது விபரீதமான முயற்சியாகத் தெரிகிறதே என்று நாம் தயங்கலாம். ஆனால், வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள், வீரக்கதைகளாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியும்.

நீள, அகல, உயரம் என்று எல்லாப் பக்கங்களிலும் அளவுக்கதிகமாய் வளர்ந்திருந்த கோலியாத்து என்ற மனித மலையோடு (காண்க. 1 சாமுவேல், 17: 4-7) மோத புறப்படும் தாவீது நம் நினைவுக்கு வருகிறார். அந்த மோதலில் யார் வென்றது, ஓநாயா, ஆட்டுக்குட்டியா என்பது நாமறிந்த வரலாறு.

"யார் இந்த அரை நிர்வாணப் பரதேசி?" என்று ஆங்கில அரசு ஏளனமாகப் பார்த்த காந்தியடிகள் நம் நினைவுக்கு வருகிறார். அரை நிர்வாணமாய், நிராயுத பாணியாய் சென்ற அந்த ஆட்டுக்குட்டி, ஓநாய்களாய் வலம்வந்த ஆங்கில அரசை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைத்ததென்பது நமக்குத் தெரிந்த வரலாறு.

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் செல்லுமா? வழக்கமாய் செல்லாது. ஆனால், அந்த ஆட்டுக்குட்டிகள் மனதில் நம்பிக்கை இருந்தால், ஓநாய்களிடையே தலை நிமிர்ந்து நடக்கும். இவ்விதம், வீரநடை போடும் அளவுக்கு நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் ஆட்டுக்குட்டிகள் இயேசுவுக்குத் தேவை.

ஓநாய்களிடையே போகவேண்டும் என்பது உறுதியாகி விட்டது. சரி. அதற்குத் தகுந்ததுபோல், எல்லா ஏற்பாடுகளும் செய்துகொள்ள வேண்டாமா? மீண்டும் தாவீது நம் நினைவுக்கு வருகிறார். கோலியாத்தை எதிர்த்துச் செல்லும்போது, தன் மீது தற்காப்புக்காகப் போடப்பட்ட கவசங்களையெல்லாம் கழற்றிவிட்டு, கையில் கவணும், கல்லும் எடுத்துப் புறப்பட்டார், இளையவர் தாவீது. அவருக்கு எங்கிருந்து வந்தது இந்த வீரம்? ஆயனாக இருந்த தாவீது, ஆண்டவனை அதிகம் நம்பியவர். தன்னையும், தன் ஆடுகளையும் இரத்த வெறி பிடித்த மிருகங்களிடம் இருந்து காத்த இறைவன், இந்த மனித மிருகத்திடமிருந்து தன்னையும், தன் மக்களையும் காப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் விளைந்த வீரம் அது (1 சாமுவேல், 17: 37). நம்பிக்கை இருந்தால் போதும், நம் கையில் எதுவும் வேண்டாம் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். "பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்லவேண்டாம்" என்று வருகிறது, இயேசுவின் இரண்டாவது நிபந்தனை.

எவ்வித ஏற்பாடும் இல்லாமல் பயணம் மேற்கொள்வதா? பணியாற்றச் செல்வதா? சரியாகப்படவில்லையே. இப்படிச் சொல்ல வைக்கிறது, நாம் வாழும் காலம். உண்பதற்கு, உடுத்துவதற்கு, உடல் பயிற்சி செய்வதற்கு, ஏன்?... உறங்குவதற்கும் கூட திட்டங்கள் தீட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் 'management' காலத்தில் வாழும் நமக்கு, இயேசு சொல்லும் இந்த நிபந்தனையைக் கேட்டு சிரிப்பதா? வியப்பதா? தெரியவில்லை.

நமது பயணங்களை எண்ணிப் பார்ப்போம். பயணம் என்று சொன்னதும், நாம் சுமந்து செல்லும், அல்லது இழுத்துச் செல்லும் பெட்டிகள் நம் மனக்கண்களில் அணிவகுத்து நிற்கும். இக்காலத்தில், குடும்பத்தோடு பயணம் செய்யும் சிறுவர், சிறுமியரும் பெட்டிகளை இழுத்துக் கொண்டு செல்வது, பார்த்துப் பழகிப்போன காட்சியாகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் இரு பெட்டிகள் அல்லது பைகள் என்ற கணக்கில்... நமது பயணங்களில் சுமை கூடிவிடுகிறது.

இதற்கு நேர் மாறாக, நமது பயணங்களுக்கு எதுவுமே எடுத்துச் செல்லவேண்டாம் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுவது, நடைமுறைக்கு ஒத்துவராத ஆலோசனையாகத் தெரிகிறது. ஆனால், ஆழமாக சிந்தித்தால், இயேசுவின் இந்தக் கூற்றில் உள்ள உண்மைகள் புரியும்.

நாம் எல்லாருமே இவ்வுலகில் வழிபோக்கர்கள்தான். போகும் வழியில் நாம் சேகரித்தவற்றை அதிகரித்துக்கொண்டே போனால், இறுதியில், என்ன செய்யப் போகிறோம்? நம் இறுதிப் பயணத்தின்போது, இயேசுவின் இந்த ஆலோசனையை முற்றிலும் பின்பற்ற வேண்டியிருக்குமே. நம்முடன் ஒன்றுமே எடுத்துச் செல்ல முடியாத அந்த இறுதிப் பயணத்திற்கு முன்னேற்பாடாக, இப்போதிருந்தே கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொள்ளலாமே!

இயேசுவுக்கு இது எளிதாகலாம். ஏனெனில், அவரிடம் சொத்து என்று ஒன்றுமே இல்லை. ஆனால், உலகத்தில் பெரும் பகுதிகளை வென்று, ஏராளமாய் பொருள்களைத் திரட்டி வைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டரும், இதே கருத்தைத்தானே தன் இறுதி மூன்று ஆசைகளில் ஒன்றாகச் சொல்லிச் சென்றார். தனது இறுதிப் பயணத்தின்போது, திறந்தபடி இருந்த வெறும் கைகளைத் சவபெட்டிக்கு வெளியில் மக்கள் பார்க்கும்படி அவர் வைக்கச் சொன்னார். அதற்கு காரணம் கேட்ட தளபதியிடம், வெறுங்கையோடு வந்தோம், வெறுங்கையோடு செல்வோம் என்ற பாடத்தை மக்கள் உணரவேண்டும் என்று சொன்னார், மாவீரன் அலெக்சாண்டர்!

வெறுங்கையோடு செல்லுங்கள், எதையும் எடுத்துச் செல்லவேண்டாம் என்று கூறும் இயேசு, கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் நுழையும் இல்லங்களில் எல்லாம் அமைதி என்ற ஆசீரைக் கொடுங்கள் என்கிறார். இது தன் பணியாளர்களுக்கு இயேசு தரும்  மூன்றாவது நிபந்தனை.

இயேசு கூறும் இந்த மூன்று நிபந்தனைகளுமே நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை என்ற தயக்கம் எழுகிறது. மனித இயல்பு, உலக வழக்கு என்ற குறுகிய வட்டங்களை நம்மைச் சுற்றி வரைந்துகொண்டு சிந்திப்பதால் நமக்குள் எழும் தயக்கம் இது. இவ்வுலகைச் சார்ந்த வழிகளில் மட்டுமே சிந்திப்பதால், உயர்ந்த கனவுகள் சிறகடித்துப் பறக்க முடியாமல், நமக்குள் சிறைப்படுத்தப்படுகின்றன.

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்" (எசாயா 65:25) என்ற கனவை, இறைவாக்கினர் எசாயா மொழிந்தார். இயேசு அந்தக் கனவையும் தாண்டி, இன்றைய நற்செய்தியின் வழியே சொல்வது இதுதான்: "எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுமின்றி, ஓநாய்களிடையே செல்லும் ஆட்டுக்குட்டிகள், ஓநாய்களுக்குச் சமாதான ஆசீரை வழங்கட்டும்" என்பது, இயேசு நம்முன் வைக்கும் கனவு, அழைப்பு.

இது நடக்கக்கூடியதுதானா? நடக்கும், நம்பிக்கை இருந்தால்... நாம் சிறப்பித்துவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இத்தகையக் கனவுகளை, நம் உள்ளத்தில் இறைவன் விதைக்கவும், அதன் பலனை நாம் அறுவடைச் செய்யவும், நமது உலகப்பயணம் சுமைகளின்றி சுகமாக அமையவும், அனைவருக்கும், இறைவனின் இரக்கத்தையும், அமைதியையும் ஆசீராக வழங்கும் ஆட்டுக்குட்டிகளாய் நாம் வாழவும் அவர் அருளை வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.