2016-07-02 15:32:00

ஆசிய-பசிபிக் பகுதியில் JRS 35 ஆண்டுகள்


ஜூலை,02,2016. முப்பந்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஆசிய-பசிபிக் பகுதியில் புலம்பெயர்ந்தவர்களுக்குப் பணியாற்றத் தொடங்கிய JRS என்ற இயேசு சபையின் புலம்பெயர்ந்தவர் அமைப்பு, தற்போது, மூன்று இலட்சத்து பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக இயேசு சபையின் முன்னாள் தலைவர் மறைந்த அருள்பணி Pedro Arrupe அவர்களால் 1981ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிய-பசிபிக் JRS அமைப்பு, ஆஸ்திரேலியா, கம்போடியா, இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கிழக்குத் திமோர், தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளில், புலம்பெயர்ந்தவர் மற்றும் அகதிகளுக்கெனப் பணியாற்றி வருகிறது.

புலம்பெயர்ந்தவர் மற்றும் அகதிகளின் அடிப்படைத் தேவைகள் மட்டுமன்றி, அவர்களின் சமூக முன்னேற்றம், கல்வி மற்றும் சமுதாயத்தில் அவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணிகளையும் ஆற்றி வருவதாக, JRS அமைப்பு, Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளது.

ஆசிய-பசிபிக் JRS அமைப்பு, தாய்லாந்தில் வாழ்ந்த புலம்பெயர்ந்த மக்களுக்கென சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது என்றும், தடுப்பு மையங்களில் இருக்கும் இம்மக்களுக்கு உதவிசெய்வது, உளவியல் முறையில் உதவுவது உட்பட பல பணிகளை ஆற்றி வருகின்றது என்றும் JRS அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.