2016-07-02 15:21:00

அமைதிக்காக விண்ணப்பிப்பது நேர்மையானதாக இருக்க வேண்டும்


ஜூலை,02,2016. மோதல்களில் ஈடுபட்டுள்ள இருதரப்பினருக்கு இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் இடைநிலையாளர்கள், இருதரப்பினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தும்போது, அம்முயற்சி வெற்றியடையும் என, இந்திய திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

அமைதிக்காக விண்ணப்பிப்பது உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்றும், அதை அதிகமாக விளம்பரப்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்றும், நல்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மக்கள் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டுமென்றும் கூறிய பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் அவர்கள், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முக்கிய கருவி செபம் என்றார்.

வடகிழக்கு இந்தியாவில் பல ஆண்டுகளாக வன்முறை மோதல்களில் ஈடுபட்டுள்ள குழுக்கள் மத்தியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு, 1996ம் ஆண்டிலிருந்து அமைதிப்பணிக் குழு வழியே தலத்திருஅவை முயற்சித்து வருவது பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கப்படும் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மெகாலயா, மிசோராம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில், பல ஆண்டுகளாக, வன்முறை மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. 2014ம் ஆண்டில் 413 பேர் இறந்தனர். இப்பகுதியில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து கடந்த மே மாதத்தில் பல்வேறு சமயக் குழுக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் மற்றும் சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் கூட்டம் நடத்தினர். இதில் பேராயர் மெனாம்பரம்பில் அவர்களும் கலந்துகொண்டார். 

பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் அவர்கள், மெகாலயாவின் ஜொவாய் அப்போஸ்தலிக்க நிர்வாகி மற்றும் அசாம் மாநிலத்தின் குவாஹாத்தியின் முன்னாள் பேராயருமாவார்.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.