2016-06-30 15:19:00

மனித உரிமை மீறல்கள் மீண்டும் இழைக்கப்படாமல் இருக்க உறுதி


ஜூன்,30,2016. இலங்கை அரசு நல்லிணக்கத்தை எட்டுவதிலும், போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதிலும் உறுதியுடன் இருக்கிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர (Mangala Samaraweera) கூறியுள்ளார்.

இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விடயத்தில், ஐநா மனித உரிமை அவை, கடந்த ஆண்டு வெளியிட்ட தீர்மானத்தை அமல்படுத்துவதில் இலங்கை அரசின் செயல்பாடு குறித்து, இச்செவ்வாயன்று பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள், இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்கள், இத்தீர்மானத்தை அமல்படுத்த உறுதியளித்தார் என்பதை சுட்டிக்காட்டினார்.

சுதந்திரம், குடியரசு, மற்றும் நல்லிணக்கம் ஆகியவை இத்தீர்மானத்தை அமல்படுத்துவதன் மூலம் வலுப்பெறும் என்று, இவ்வாண்டு சுதந்திர நாள் உரையில் அரசுத்தலைவர் கூறியதை, சமரவீர அவர்கள், தன் உரையில் நினைவு கூர்ந்தார்.

இலங்கையின் புதிய தேசிய ஒற்றுமை அரசு பதவியேற்ற ஓராண்டுக்குள் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய சமரவீர அவர்கள், இந்த நல்லிணக்க வழிமுறைகள ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைப்பதற்கான செயலகம், பிரதமர் அலுவலகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

வட இலங்கையில் நிலவும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான, இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட பொதுமக்கள் காணிகள் 2018ம் ஆண்டுக்குள் ஒப்படைக்கப்படும் என்று கூறிய சமரவீர அவர்கள், நாட்டின் திட்டங்களுக்காகத் தேவைப்படும் காணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு உரிய நியாயமான இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார்.

நல்லிணக்கம் என்பது ஓரிரவில் வருவதல்ல என்று கூறிய மங்கள சமரவீர அவர்கள், அது கடுமையான உழைப்பாலும், தொடர்ச்சியான நடவடிக்கைகளாலும் தான் பெறமுடியும் என்றார். 

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.