2016-06-30 14:58:00

சிரியா நாட்டு தொண்டர்களுக்கு Cor Unum அவையின் பயிற்சிப்பாசறை


ஜூன்,30,2016. திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பாக அமைந்துள்ள Cor Unum அவை, பிற அமைப்புக்களுடன் இணைந்து, ஜுன் 29ம் தேதி முதல், ஜூலை 2ம் தேதி முடிய லெபனான் நாட்டின் தலைநகர், பெய்ரூட்டுக்கு அருகே பயிற்சிப் பாசறை ஒன்றை நடத்தி வருகிறது.

சிரியா நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கு வழங்கப்படும் இந்தப் பயிற்சிப் பாசறையை, Catholic Relief Service, Aid to the Church in Need (ACN) மற்றும் Missio ஆகிய பிறரன்பு அமைப்புக்களும் இணைந்து நடத்துகின்றன.

சிரியாவில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் மாரியோ செனாரி உட்பட, 11 ஆயர்களும், தன்னார்வத் தொண்டர்களுடன்,  இந்தப் பயிற்சிப் பாசறையில் பங்கேற்கின்றனர்.

2011ம் ஆண்டு துவங்கிய சிரியா நாட்டு போரில், இதுவரை 400,000 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 20 இலட்சம் பேர் காயமடைந்துள்ளனர் என்றும், 1 கோடியே 20 இலட்சம் மக்கள் சிரியாவிலும், 80 இலட்சம் மக்கள் ஈராக்கிலும் அடிப்படைத் தேவைகள் இன்றி வாழ்கின்றனர் என்றும் Cor Unum அவை புள்ளி விவரங்களை வழங்கியுள்ளது.

2015ம் ஆண்டு கத்தோலிக்கத் திருஅவை திரட்டிய 15 கோடி டாலர்கள் நிதி உதவி, 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை சென்றடைந்துள்ளது என்றும், இந்த நிதி உதவி, முக்கியமாக, கல்விப் பணி, மற்றும் உணவு உதவி ஆகியவற்றின் வழியே மக்களை அடைந்துள்ளது என்றும் Cor Unum அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.