2016-06-30 15:55:00

இது இரக்கத்தின் காலம்:வருங்காலத் தலைமுறைக்கு விட்டுச்செல்வது


ஒருநாள், எட்டு வயதுள்ள ஒரு சிறுமியும், அவருடைய ஐந்து வயது தம்பியும், பொம்மைகள் விற்கப்படும் கடை ஒன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது,  அச்சிறுமி மட்டும் திடீரென்று நின்று, இரண்டு அடி பின்னால் வந்து அந்தக் கடையையும், அதில் அலங்காரமாக அடுக்கியிருந்த பொம்மைகளையும் வைத்தகண் வாங்காமல் ஏக்கத்தோடு. பார்த்தார். அதைக் கவனித்துவிட்ட அந்தக் குட்டிச் சிறுவன், “என்ன, உனக்கு அந்த பொம்மை வேணுமா?”ன்னு பெரிய மனிதர் மாதிரி கேட்டார். ஆமாம் என்று தலையை ஆட்டினார் அச்சிறுமி. “சரி, வா!”ன்னு அக்காவைக் கடைக்குக் கூட்டிக்கொண்டுபோய்,“உனக்கு என்ன பொம்மை வேணும், சொல்லு?”னு கேட்டார். அந்தச் சிறுமியும் ஒரு பொம்மையைக் காண்பிக்க, அதை நிதானமாக எடுத்து, அக்காளிடம் கொடுத்துவிட்டு, கடைக்காரரைப் பார்த்து, “எவ்ளோ சார் இந்த பொம்மை விலை?”ன்னு கேட்டார் அந்தச் சிறுவன். ஆரம்பத்திலிருந்தே அந்தக் குட்டிப் பையனுடைய பெரிய மனிதத் தோரணையைப் பார்த்து மனதிற்குள்ளே இரசித்துக்கொண்டிருந்தார் கடைக்காரர். ஏதோ அவர் விலையைச் சொன்னதும், தனது பணப்பையிலிருந்து ரூபாய்த் தாளை எடுத்துக் கொடுக்கிறவர் மாதிரி காட்டிக்கொண்டார் அந்தச் சிறுவன். கடைக்காரரும், ஒரு புன்னகையோடு, “நீ எவ்வளவு தருவே?”ன்னு கேட்டார். அந்தச் சிறுவன், தன் கால்சட்டை பைக்குள் கைவிட்டு, கடற்கரை மணலில் பொறுக்கிய சின்னச் சின்ன கிளிஞ்சல்களை வெளியே எடுத்து மேஜை மீது பரப்பினார். கடைக்காரரும் சீரியஸா பணத்தை எண்ணுகிறவர் மாதிரியே அந்தக் கிளிஞ்சல்களை ஒவ்வொன்றாக எண்ணினார். அப்புறம் சிறுவனைப் பார்த்தார். அவர் முகம் வாடிப் போய்விட்டது. “என்ன சார், பணம் குறையுதா?”ன்னு கவலையோடு கேட்டார் சிறுவன். “சேச்சே! அதெல்லாம் இல்லே. நிறையவே இருக்கு”ன்னவர், ஒரு ஐந்தாறு கிளிஞ்சல்களை மட்டும் தன்பக்கம் நகர்த்தி வைத்துக்கொண்டு, “இதுதான் இந்தப் பொம்மையோட விலை. மீதிப் பணமெல்லாம் உனக்குதான்”னார். அந்தச் சிறுவன் மிகவும் மகிழ்ந்து, அந்தக் கிளிஞ்சல்களை எடுத்துத் தன் பைக்குள்ளே போட்டுக்கொண்டு, அக்காவோடு நடையைக் கட்டினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கடைப் பணியாள் ஒருவருக்கு ஆச்சரியம், அதோடு குழப்பம்! அவர் தன் முதலாளியைப் பார்த்து, “என்னங்க ஐயா, விலை அதிகமான அந்தப் பொம்மையை அந்தச் சிறுவனுக்கு வெறும் ஐந்து கிளிஞ்சலுக்கு வித்துட்டீங்க?”ன்னு பொறுக்கமாட்டாம கேட்டார். அதற்கு கடைக்காரர், “இல்லப்பா, நமக்குத்தான் அது வெறும் கிளிஞ்சல். அந்தச் சிறுவனைப் பொறுத்த வரைக்கும் அது பெரிய பொக்கிஷம். இந்த வயதுல அந்தச் சிறுவனுக்குப் பணம்னா என்னன்னு தெரியாது; அதோட மதிப்பும் புரியாது. பெரியவனாகும்போது கண்டிப்பா புரிஞ்சுப்பான். அப்போ, சின்ன வயசுல நாம நம்ம அக்காவுக்குப் பணத்துக்குப் பதிலா வெறும் அஞ்சே அஞ்சு கிளிஞ்சல்களைக் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தோமேன்னு நினைவு வரும். அப்போ, இந்தக் கடையைப் பத்தியும் என்னைப் பத்தியும் நினைப்பார். இந்த உலகம் நல்ல மனிதர்களால் நிரம்பியதுதான்னு அவர் மனசுல ஓர் அழுத்தமான எண்ணம் விழும். அந்த நேர்மறை எண்ணத்தை அச்சிறுவன் மத்தவங்களுக்கும் பரப்புவார். எனக்கு அதுதான் வேணும்!”னு சொல்லிப் புன்னகைத்தார். மனித வாழ்வு, நேர்மறை எண்ணங்களால் நிரம்பும்போது, இவ்வுலகம் சொர்க்கப் பூமியாகக் காட்சி தரும். வருங்காலத் தலைமுறைக்கு நாம் எதை விட்டுச்செல்கிறோம்?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.