2016-06-29 16:29:00

இது இரக்கத்தின் காலம்.. – நல்ல தலைவர்களை அடையாளம் காண்போம்


ஜூன், 29,2016. ஒருமுறை ஒரு யூத தொழிலதிபர் தன் நண்பரை விருந்திற்கு அழைத்தார். அவர் தன் நண்பரை நன்றாக உபசரித்து, சிறந்த உணவு வகைகளை பரிமாறினார். அவர் கிளம்பத் தயாரானபோது, உணவிற்கும் உபசரிப்பிற்கும் 800 டாலருக்கான பில் ஒன்றை அவரிடம் நீட்டினார். நண்பர் கொதித்துப்போனார், ‘என்ன இது? என்னை விருந்திற்கு அழைத்ததால்தான் நான் வந்தேன். வந்தபின் என்னிடம் கட்டணம் கேட்கிறாயே?’ என்றார். அந்த தொழிலதிபர், ‘இல்லை, இது வியாபாரம், நான் உன்னை அழைத்தது உண்மைதான். ஆனால் நீதான் வந்தாய், நீதான் உணவு உண்டாய். அதனால் நீ கண்டிப்பாக பணம் தரவேண்டும்’ என்றார். அதற்கு அவருடைய நண்பரோ, ‘இது எப்படி சரியாகும்? நான் விருந்து கேட்கவில்லை. நீதான் அழைத்தாய், நான் எதற்கு கட்டணம் கொடுக்க வேண்டும்?’ என கேட்டார். ‘நாம் நம் மதத்தலைவரிடம் செல்வோம் வா, அவர் என்ன சொல்கிறாரோ அதன்படியே நடப்போம்’ என்றார் தொழிலதிபர். அவர்கள் இருவரும் தலைவரிடம் சென்றார்கள். அவரிடம், நடந்தவை அனைத்தையும் சொன்னார்கள். அனைத்தையும் கேட்ட மதத் தலைவர், ‘நீங்கள் கண்டிப்பாக கட்டணம் கொடுக்க வேண்டும். வியாபாரம், வியாபாரமாக இருக்க வேண்டும். அழைத்தது அவராக இருந்தாலும் நீங்கள்தான் சென்று சாப்பிட்டீர்கள், அதனால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்’ என்றார். ‘என்ன கொடுமை இது! நானாக வந்து இப்படி மாட்டிக்கொண்டேனே! சரி, பணம் கொடுக்கிறேன்’ என்று, விருந்துக்கு வந்த நண்பர் பணத்தைக் கொடுத்தார். அதற்கு அந்தத் தொழிலதிபர், ‘இல்லை. நீ பணம் கொடுக்க வேண்டாம்’ என்றார். அதற்குமேல் பொறுக்க முடியாமல், ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது? என்னை விருந்திற்கு அழைத்து இவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக்கி, மதத்தலைவரிடம் அழைத்துச் சென்று, இப்போது பணம் கொடுக்க வேண்டாம் என்கிறாயே?’ என்று கேட்டார். ‘இல்லை. நம் தலைவர் எவ்வளவு மோசமானவர் என்பதை உனக்குக் காட்டத்தான் அப்படிச் செய்தேன்,’ என்றார் தொழிலதிபர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.