2016-06-29 15:51:00

அதிகரித்து வரும் கொலைகள் குறித்து பிலிப்பீன்ஸ் ஆயர்கள் கவலை


ஜூன்,29,2016. பிலிப்பீன்ஸ் நாட்டில் நீதித்துறை, காவல்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டை மீறி, கொலைகள் அதிகரித்து வருவது குறித்து அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகம், போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் பலர், எவ்வித விசாரணையும் இன்றி, கொல்லப்பட்டு வருவது குறித்து கவலை வெளியிட்டு, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள், நீதித் துறைக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.         

கொல்லப்படுவோர் குற்றவாளிகள் என்ற சந்தேகத்திற்கு உள்ளானவர்கள் என்றாலும், சிந்தப்படும் அவர்களது இரத்தமும், நீதி வேண்டி, விண்ணகம் நோக்கி எழுகின்றது என்று, பேராயர் வியேகாஸ் அவர்களின் மடல் சுட்டிக்காட்டுகிறது.

விசாரணை ஏதுமின்றி, வரைமுறையின்றி நடைபெறும் இக்கொலைகள் குறித்து, அக்கறையின்றி இருப்பதும், மௌனம் காப்பதும் நமது சமுதாய பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஒரு வழி என்றும், பேராயர் வியேகாஸ் அவர்கள் தன் மடலில் கூறியுள்ளார்.

குற்றங்களை வேரறுக்கும் நோக்கத்துடன் குற்றவாளிகளை கொல்வது எவ்வகையிலும் நியாயமாகாது என்பதை நீதித் துறை உணரவேண்டும் என்று பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் வியேகாஸ் அவர்கள் தன் மடலில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.