2016-06-28 14:08:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 28


மன்னிப்பின் அவசியத்தை வலியுறுத்த இயேசு கூறிய 'மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை'யில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. பத்தாயிரம் தாலந்துகள், கடன்பட்டிருந்த பணியாளர் அரசரிடம் கொண்டுவரப்பட்டார். அந்தக் கடனை ஈடுசெய்வதற்கு, அந்தப் பணியாளர், அவரது மனைவி, மக்கள், அனைவரையும் விற்கச் சொல்லி அரசர் ஆணையிட்டார் என்று இந்த உவமையின் முதல் பகுதியில் வாசிக்கிறோம்.

கடனை மீண்டும் தரமுடியாத பணியாளரும், அவரது குடும்பத்தினர் அனைவரும் விற்பனைப் பொருளாகவேண்டும் என்று அரசர் விடுத்த கொடுமையான ஆணை, இன்றைய உலகில் நிலவும் அவலங்களை நம் மனக்கண்முன் கொணர்கிறது. தனி மனிதர்களும், அவர்கள் குடும்பத்தினரும் விற்பனை செய்யப்படுவது, தலைமுறை தலைமுறையாகக் கொத்தடிமைத் தொழில் செய்வது போன்ற கொடுமைகள் 21ம் நூற்றாண்டிலும் தொடர்கின்றன. தனி மனிதர்களைப் போல, வறுமைப்பட்ட நாடுகளும் கடன்பட்டு கலங்கி நிற்பதை சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். சில நாட்களுக்கு முன், பிரித்தானிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவை எட்டியபோது, பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள், பூகம்பங்கள் ஆகியவற்றை அறிவோம். பண பரிமாற்றங்கள் உலக அரசுகளை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைக்கின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

2015ம் ஆண்டு, சனவரி முதல் தேதி, புத்தாண்டு நாளன்று கொண்டாடப்பட்ட 48வது உலக அமைதி நாளுக்கென, "இனி ஒருபோதும் அடிமைகள் அல்ல, உடன்பிறப்புக்களே" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியொன்றை வெளியிட்டார். இச்செய்தியில், அடிமைத்தனத்தின் வரலாறு, அதன் இன்றைய நிலை, அதனை அறவே ஒழிக்கும் வழிகள் என்ற கருத்துக்களைப் திருத்தந்தை பகிர்ந்துள்ளார். 'அடிமைத்தனத்தின் பல்வேறு முகங்கள் - நேற்றும், இன்றும்' என்ற பகுதியில், வளர் இளம் பருவத்தினர்,  சிறுவர், சிறுமியர், குழந்தைகள் ஆகியோர் இன்று எவ்வாறெல்லாம் அடிமைகளாக்கப்படுகின்றனர் என்று, திருத்தந்தை சுட்டிக்காட்டும் கொடுமைகள், வேதனையைத் தருகின்றன. உடல் உறுப்புக்களின் வர்த்தகம், சிறார் இராணுவப்பணி, தர்மம் கேட்கும் தொழில், போதைப்பொருள் கடத்தல், தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக்கப்படுதல் என்பவை, திருத்தந்தை சுட்டிக்காட்டும் சில கொடுமைகள்.

திருத்தந்தை அவர்கள் பட்டியலிடும் இந்தக் கொடுமைகளைக் கேட்கும்போது, இறைவாக்கினர் ஆமோஸ், இஸ்ரயேல் மக்களைப் பற்றி கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன:

இறைவாக்கினர் ஆமோஸ் 2: 6-7

ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள். ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்: ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்.

பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் மனநிலையும், தவறான கொள்கைகளால் போரிலும், மோதல்களிலும் ஈடுபடும் அடிப்படைவாத உணர்வுகளும் அடிமைத்தனம் வளர்வதற்கு முக்கிய காரணங்கள் என்று, உலக அமைதி நாளுக்கென வழங்கியுள்ள செய்தியில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நவீன அடிமைத்தனம்' செழித்து வளர்வதற்கு மிக முக்கியக் காரணமாகக் கூறுவது, பொதுமக்களாகிய நாம் காட்டும் 'அக்கறையின்மை'. அடிமைத்தனம் ஓர் உலகளாவியப் பிரச்சனை என்று சொல்லிவிட்டு, நாம் அனைவரும் அக்கறையின்றி ஒதுங்கிவிடுவதால், இக்கொடுமை, மனித சமுதாயத்தில் புரையோடிப்போனப் புண்ணாக மாறியுள்ளது என்று இச்செய்தியில் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுகள், பன்னாட்டு நிறுவனங்கள் என்ற அனைத்துத் தளங்களிலும் அடிமைத்தனத்தை ஒழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திருத்தந்தை இச்செ.ய்தியில் விண்ணப்பித்துள்ள அதேவேளையில், தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்யமுடியும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். எடுத்துக்காட்டாக, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்குவதில் நாம் எடுக்கும் முடிவுகள், நவீன அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு உதவும் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளது, நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.

நாம் பொருள்களை வாங்க முடிவு செய்யும்போது, அது வெறும் பொருளாதார அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு அல்ல; கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் பின்புலத்தில், குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் பொருள்களுக்குப் பின்புலத்தில், அதிர்ச்சி தரும் உண்மைகள் புதைந்துள்ளன. மிகக் குறைந்தக் கூலிக்கு, அநியாயமாகக் கசக்கிப் பிழியப்படும் மனித உழைப்பு, பல மணிநேரங்கள் ஓரிடத்தில் அமர்ந்தபடி பொருள்களை உருவாக்கவேண்டும் என்பதற்காக, குழந்தைகள், சங்கிலியால் பிணைக்கப்பட்டு துன்புறுதல் போன்றவை, ஒரு சில கசப்பான உண்மைகள்.

கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்படும் இந்த அவல வரலாற்றின் பக்கங்களை அறிந்திருந்தும், நாம் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களை வாங்குவதையே, நமது 'அக்கறையின்மை' என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். இரத்தக்கறை படிந்த இப்பொருள்களை நாம் வாங்க மறுக்கும்போது, ஏதோ ஒருவகையில், இந்த அடிமைத்தனத்தை ஒழிக்க முயல்கிறோம் என்பது, திருத்தந்தை நமக்கு முன் வைக்கும் ஓர் அழைப்பு, ஒரு சவால்!

‘உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மை’ (Globalised indifference) என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல்வேறு நேரங்களில் கூறிவரும் கருத்து. உலக அமைதி நாள் செய்தியின் இறுதியில், அக்கருத்தை மீண்டும் ஒருமுறை கூறி, ‘உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மை’க்கு ஒரு மாற்று மருந்தாக, 'நாம் அனைவரும் உடன்பிறப்புக்கள் என்ற உணர்வை உலகமயமாக்குவோம்' என்ற அழைப்பையும் உலக அமைதி நாள் செய்தியில் திருத்தந்தை விடுத்துள்ளார்.

திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி, 2014ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி, மனித உரிமைகள் நாளன்று வெளியானது, மிகப் பொருத்தமாக இருந்தது. அதற்கு முன்னதாக, டிசம்பர் 2ம் தேதி, அடிமைநிலை ஒழிப்பு உலக நாள் கடைபிடிக்கப்பட்ட வேளையில், வத்திக்கானில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு நடைபெற்றது. அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், உலகின் சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்து, 2020ம் ஆண்டுக்குள் நவீன அடிமைமுறையை ஒழிப்போம் என்ற அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற இத்தகைய நிகழ்வில், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபைத் தலைவர் பேராயர் Justin Welby, கான்ஸ்டான்டிநோபிள் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் பிரதிநிதி, இந்து மதம் சார்பில் இந்தியாவிலிருந்து வந்திருந்த மாதா அமிர்தானந்தமயி, உட்பட 13 சமயத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மனித வர்த்தகம், பாலியல் தொழில், கட்டாயத் தொழில்முறை போன்றவை மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றம் என, துணிவாக, தெளிவாகக் கூறியதுடன், தங்கள் தலைமைத்துவ பொறுப்பைப் பயன்படுத்தி, தாங்கள் வாழும் சமூகங்களில் இவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சமயத் தலைவர்கள் உறுதி எடுத்தனர். நவீன அடிமைத்தனத்தில் தற்போது சிக்குண்டிருப்பவர்களை 2020ம் ஆண்டுக்குள் மீட்பதற்கும் இத்தலைவர்கள் உறுதி கூறினர். Global Freedom Network (GFN) என்ற அமைப்பின் முயற்சியால் இந்நிகழ்வு நடைபெற்றது. இவ்வமைப்பின் கணிப்புப்படி, நவீன அடிமைமுறையில் ஏறக்குறைய 3 கோடியே 60 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர் எனத் தெரிகிறது.

நாம் தேடலை மேற்கொண்டுள்ள உவமைக்குத் திரும்புவோம். தன்னையும், தன் மனைவி, மக்களையும் விற்பனைப் பொருளாக்கவேண்டும் என்று அரசர் ஆணையிட்டதும், "உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்" (மத்தேயு 18: 26-27) என்று இவ்வுவமையின் முதல் பகுதி நிறைவு பெறுகிறது.

அரசர் இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்தால், அவரது கடனைத் திருப்பித் தந்துவிடுவதாக பணியாள் வேண்டுகிறார். பத்தாயிரம் தாலந்துகள் கடனை பத்தாயிரம் ஆண்டுகள் சென்றாலும் தன் பணியாளரால் திருப்பித் தரமுடியாது என்பது அரசருக்குத் தெரிந்தது. அப்பணியாள் தன் காலில் விழுந்து பணிந்தது, அரசரைப் பாதித்திருக்க வேண்டும். எனவே, அப்பணியாள் வேண்டிக்கேட்ட பொறுமையையும் தாண்டி, ‘அவரது கடன் முழுவதையும் அவர் தள்ளுபடி செய்தார்’.

“தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போயிற்று” என்ற பழமொழி நமக்கு நினைவிருக்கலாம். அதாவது, தலையைத் தாக்கவந்த அம்போ, வாளோ தலைப்பாகையை மட்டும் தாக்கிச் சென்றது என்ற பொருளைத் தருகிறது, இந்தப் பழமொழி. ஆனால், இங்கு நடந்தது என்ன? அரசர் கொண்ட பரிவின் காரணமாக, தலையை வெட்டவந்த வாள், தலைப்பாகையை எடுத்துவிட்டு, ஒரு மகுடத்தை அந்தப் பணியாளரின் தலையில் சுமத்திச் சென்றது.  கழுத்தை இறுக்கி, உயிரைப் பறிக்கவந்த தூக்குக் கயிறு, திடீரென ஒரு மாணிக்க மாலையாக மாறி, கழுத்தை அணிசெய்தது. அரசர் காட்டிய இரக்கத்தைக் கண்டு, அந்தப் பணியாளர், நன்றி உணர்வில் மூழ்கி, மூச்சிழந்து, பேச்சிழந்து மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அவ்விதம் நடக்கவில்லை. இந்த அற்புத நிகழ்வையடுத்து அங்கு நடந்ததை, இவ்வுவமையின் இரண்டாம் பகுதி விவரிக்கின்றது. இதனை நமது அடுத்தத் தேடலில் தொடர்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.