2016-06-28 16:32:00

முதலீடுகள் ஏழைகளுக்குப் பயன்படுவதாக அமைய வேண்டும்


ஜூன்,28,2016. தொழில் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடுகள் செய்வது, ஏழைகளுக்கு உதவுவதற்கான மிகப்பெரிய புதிய வழி என்று, திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

கத்தோலிக்க நிவாரணப் பணி அமைப்புகளுடன் சேர்ந்து, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை உரோமையில் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கு குறித்துப் வத்திக்கான் வானொலியில் பேசிய, வாஷிங்டன் முன்னாள் பேராயர் கர்தினால் தெயதோர் மெக்காரிக் அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருஅவையின் சமூகப்பணிகளுக்கு முதலீடுகள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதை ஆலோசிப்பதற்காக, நடந்த இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட கர்தினால் மெக்காரிக் அவர்கள், ஏழைகளுக்கு உதவுவதற்குப் புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து தான் மகிழ்வதாகத் தெரிவித்தார்.

மேலும், இக்கருத்தரங்கு பற்றிப் பேசிய, CRS என்ற கத்தோலிக்க நிவாரணப் பணி அமைப்பின் தலைவர் Carolyn Woo அவர்கள், ஏழைகளைப் பயன்படுத்துவதற்காக அல்லாமல், அவர்களுக்குப் பணியாற்றுவதற்காக முதலீடுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

சமூக நீதி குறித்த விவகாரங்களில், குறிப்பாக, ஏழைகளுக்கு உதவுவதில் ஆர்வமுடன் செயல்பட்டு வந்த கர்தினால் தெயதோர் மெக்காரிக் அவர்கள், ஓய்வு பெற்றுள்ள காலத்திலும் இவ்விவகாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இச்செவ்வாயன்று நிறைவடைந்த இந்த மூன்று நாள் கருத்தரங்கில், உலகின் பல பகுதிகளிலிருந்து தொழில் நிறுவன வல்லுனர்கள் மற்றும் கத்தோலிக்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர். தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்களும் இதில் கலந்துகொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.