2016-06-28 15:53:00

திருத்தந்தை : இறைவனின் இரக்கம் நம்மை ஒன்றிணைக்கின்றது


ஜூன்,28,2016. துன்புறும் மனித சமுதாயத்திற்கு ஆற்றப்படும் பணிகளில், கத்தோலிக்கருக்கும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் இடையே இடம்பெறும் எல்லாவிதமான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களின் பிரதிநிதிக் குழுவை, இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, அனைத்து கிரேக்கர்கள் மற்றும் ஏத்தென்ஸ் பேராயர் 2ம் Ieronymos ஆகிய இருவருடன் லெஸ்போஸ் தீவு சென்று புலம்பெயர்ந்தவர் மற்றும் அகதிகளைச் சந்தித்தது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, உதவி தேவைப்படுபவர்க்கு, கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் ஆற்ற வேண்டிய கடமை இச்சந்திப்பில் மிகத் தெளிவாகத் தெரிந்ததாகக் கூறினார்.

கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துள்ள எல்லாரையும் ஒன்றிணைக்கும் மன்னிப்பு மற்றும் அருளின் அனுபவத்தை, திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இவ்விரு சபைகளுக்கு இடையே பல வேறுபாடுகள் இருந்தாலும், உலகில், கடவுளின் எல்லையில்லா அன்பிற்குச் சாட்சி பகர இச்சபைகள் அழைக்கப்பட்டுள்ளதையும் நினைவுபடுத்தினார்.

கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும், கடவுளின் வியத்தகு இரக்கத்தை ஒன்றுசேர்ந்து உலகுக்கு அறிவிக்க விரும்பினால், போட்டி மனப்பான்மை, பகைமை உணர்வுகள், நம்பிக்கையின்மை மற்றும் காழ்ப்புணர்வில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறை இரக்கம், நம் கடந்த கால மோதல்களின் சுமைகளிலிருந்து விடுதலையளிக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை, நாம் வருங்காலத்திற்குத் திறந்த மனதுள்ளவர்களாக இருப்போம், இக்காலத்தை நோக்கி தூய ஆவியார் நம்மை வழிநடத்துகிறார் என்றும் கூறினார்.

திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவுக்கு கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்புச் சபைப் பிரதிநிதிகள் குழு வத்திக்கானுக்கும், திருத்தூதர் அந்திரேயா விழாவுக்கு, திருப்பீடப் பிரதிநிதிகள் குழு கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்புச் சபை தலைமையகத்திற்கும் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

ஜூன் 29, இப்புதன், திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.