2016-06-28 16:15:00

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ்க்கு நன்றி


ஜூன்,28,2016. இச்செவ்வாயன்று கிளமெந்தின் அறையில் நடந்த தனது குருத்துவ 65வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் பேசிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குச் சிறப்பான விதத்தில் நன்றி தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பாதையை, இயேசுவை, இறைவனை, நம் அனைவருக்கும் காட்டி, இறை இரக்கத்தின் பாதையில் நம்மை முன்னோக்கி நடத்திச் செல்வார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம் முதல், தனது வாழ்வின் ஒவ்வொரு நாளும், தனக்குப் பாதுகாப்பு அளித்து வருவதற்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நன்மைத்தனத்தால், தனது தலைமைப் பணி ஓய்வு காலத்தில், அழகான வத்திக்கான் தோட்டத்தில் வாழ்ந்து வருவதற்கும், இவ்வாழ்வில் தனக்கு அளிக்கப்பட்டுவரும் ஒவ்வொரு பராமரிப்புக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இந்நிகழ்வில் பேசிய கர்தினால்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

65 ஆண்டுகளுக்கு முன்னர், தன்னோடு குருத்துவ அருள்பொழிவு பெற்ற தனது சகோதரர், முதல் திருப்பலி நினைவுப்படத்தில், பெயர், தேதிகளைக் குறிப்பிடாமல், கிரேக்கத்தில், "Efharistomen"  என எழுதினார், இது, மனிதப் பண்பில் எல்லாருக்கும் நன்றி சொல்வதாகும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பேராயத் தலைவர் கர்தினால் Gerhard Müller, கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ ஆகிய இருவரும் இந்நிகழ்வில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.