2016-06-28 16:24:00

ஜூன் 29ல், 25 புதிய பேராயர்களுக்கு பால்யம்


ஜூன்,28,2016. “இறைவன் நம் வாழ்வில் பிரசன்னமாக இருந்தால், நற்செய்தியை அறிவிப்பதில் உள்ள மகிழ்வு, நம் வலிமையாகவும், நம் மகிழ்வாகவும் இருக்கும்”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின. 

மேலும், திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவான, ஜூன் 29, இப்புதன் காலையில், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு நிறைவேற்றும் திருப்பலியில், மியான்மார் உட்பட, பல நாடுகளைச் சேர்ந்த 25 புதிய பேராயர்களுக்கு, பால்யம் என்ற கழுத்துப்பட்டையை அளிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மியான்மாரின் Taunggyi பேராயர் Basilio ATHAI உட்பட, எகிப்து, இத்தாலி, பிரான்ஸ், இஸ்பெயின், பிரேசில், ஈக்குவதோர், சாலமோன் தீவுகள், கியூபா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஜமெய்க்கா, போலந்து, மெக்சிகோ, பெனின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 புதிய பேராயர்கள் திருத்தந்தையிடமிருந்து பால்யம் பெறுவார்கள்.

நல்ல ஆயராம் கிறிஸ்துவின் அடையாளமாக இருக்கும் செம்மறி ஆட்டுக் குட்டியின் உரோமத்திலிருந்து பால்யம் தயாரிக்கப்படுகின்றது. முக்கிய விழாக்களின்போது திருப்பலி உடைக்கு மேலே பேராயர்கள் அணியும் பால்யம் என்ற கழுத்துப் பட்டை, திருப்பீடத்தால் பேராயர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் குறிப்பதாய் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.