2016-06-28 16:25:00

கொல்கத்தா முன்னாள் பேராயர் ஹென்ரி டி சூசா மரணம்


ஜூன்,28,2016. கொல்கத்தாவின் முன்னாள் பேராயர் ஹென்ரி செபஸ்டியான் டி சூசா அவர்கள், தனது 90வது வயதில், ஜூன் 27, இத்திங்களன்று காலமானார். இவர் 1986ம் ஆண்டு முதல், 2002ம் ஆண்டு வரை கொல்கத்தாவின் பேராயராகப் பணியாற்றினார்.

1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் மரணமடைந்தபோது, கொல்கத்தா பேராயராகப் பணியாற்றிய பேராயர் ஹென்ரி டி சூசா அவர்கள், பன்னாட்டு அளவில் மிகவும் பிரபலமானார். பின்னர், இவர், அன்னை தெரேசா அவர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியதில் முக்கிய பங்காற்றினார்.

அன்னை தெரேசா அவர்கள், உலகில் கிறிஸ்துவின் முகம் என்று அடிக்கடி பாராட்டிப் பேசிய பேராயர் ஹென்ரி டி சூசா அவர்கள், மக்கள், இறையியல்பை புரிந்துகொள்வதற்கு, அன்னை தெரேசா அவர்கள் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் என்றும் கூறியுள்ளார்.

இந்திய ஆயர் பேரவைத் தலைவர், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் என, முக்கிய பொறுப்புக்களை வகித்த பேராயர் ஹென்ரி டி சூசா அவர்கள், கொல்கத்தா பேராயரான கர்தினால் லாரன்ஸ் பிக்காச்சி அவர்களுக்குப் பின்னர், 1986ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி, பேராயராகப் பணியைத் தொடங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.