2016-06-28 16:14:00

இந்திய பெண்களில் 3ல் ஒருவருக்கு 18 வயதுக்குள் திருமணம்


ஜூன்,28,2016. இந்தியப் பெண்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர், 18 வயதுக்கு முன் திருமணம் ஆனவர்களாக இருப்பதாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இத்திங்களன்று வெளியிடப்பட்ட, 2011ம் ஆண்டு மக்கள் தொகை புள்ளிவிவரப்படி, இந்திய ஆண்களில் ஏறக்குறைய ஆறு விழுக்காட்டினரும், பெண்களில் 31 விழுக்காட்டுக்கு மேற்பட்டோரும் 18 வயதுக்குமுன் திருமணம் ஆனவர்களாக உள்ளனர்.

தொழில் அடிப்படையில் ஆராய்ந்தால், 18 வயதுக்குள் திருமணம் ஆன பெண்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கடைநிலைத் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். ஆண்களிலும் 18 வயதுக்குள் திருமணம் ஆனவர்களில் இந்தப் பிரிவினரே அதிகமாக உள்ளனர்.

18 வயதுக்குள் திருமணம் ஆன பெண்கள் மற்றும் ஆண்கள் எண்ணிக்கையில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் திருமணம் ஆன பெண்களில் 45 விழுக்காட்டினர் 18 வயதுக்குள் திருமணம் ஆனவர்களாக உள்ளனர். இதுபோல் 10 விழுக்காட்டு ஆண்கள் 18 வயதுக்குள் திருமணம் ஆனவர்களாக இருக்கின்றனர்.

ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களிலும் 40 விழுக்காட்டுப் பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் ஆனவர்களாக உள்ளனர். பீகார், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 33 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் ஆனவர்களாக உள்ளனர்.

ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.