2016-06-27 14:23:00

வாரம் ஓர் அலசல் – நம் இலட்சியங்களை எழுதுவோம்


ஜூன்,27,2016. அன்பு நெஞ்சங்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்மேனியா நாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து இஞ்ஞாயிறு இரவு வத்திக்கான் திரும்பியுள்ளார். அர்மேனியாவில், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு காட்டப்படும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து, உலகில் அமைதிக்குக் குரல் கொடுத்தார் திருத்தந்தை. உலக முஸ்லிம்கள், இரமதான் புனித மாத நோன்பைக் கடைப்பிடித்துவரும் இந்நாள்களில், பிற மதத்தவர் முஸ்லிம்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு, இரமதான் நோன்பில் கலந்து கொள்கின்றனர் மற்றும் ஏழை முஸ்லிம்களுக்கு உணவளித்து வருகின்றனர். பங்களாதேஷ் நாட்டின் டாக்காவிலுள்ள Dharmarajika புத்தமத பகோடாவில், புத்தத் துறவிகள் ஏழை முஸ்லிம்களுக்கு உணவளித்து வருகின்றனர். அத்துறவு மடத்தின் உதவி இயக்குனர் Buddhapriya Mohathero அவர்கள் இது பற்றிக் கூறுகையில், மக்களுக்குப் பணிபுரிவதில் நாம் கடவுளைக் காண்கிறோம் என அன்னை தெரேசா கூறினார், இச்செய்தியால் தூண்டப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக, இரமதான் மாதத்தில், தினமும் இவ்வாறு செய்து வருவதாகத் தெரிவித்தார். இப்படிப்பட்ட மனிதாபிமானச் செய்திகளுக்கு மத்தியில், “2 மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்கள்... சென்னை கருணையற்ற நகரமா?” என்ற தலைப்பில், இஞ்ஞாயிறன்று ஒரு செய்தியையும் வாசித்தோம்.

சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த 25 வயது நிரம்பிய இளம்பெண் சுவாதி அவர்கள், செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தினமும் ரெயிலில் வேலைக்குச் சென்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், சென்னை, நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில், மின்சார இரயிலுக்காகக் காத்திருந்தபோது, மர்ம இளைஞர் ஒருவரால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது இரயில் நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். கொலையாளி ஒரேயோர் ஆள்தான். அந்த நேரத்தில் சக பயணிகள் இரயில் தண்டவாளத்தில் கிடந்த கற்களைக் கொண்டு எறிந்து இருந்தால், நிச்சயம் கொலையாளி பயந்து மிரளத் தொடங்கியிருப்பான். கொலையாளி தப்பி ஓடும்போதும், யாரும் பிடிக்க முன்வரவில்லை. கொலையாளி அங்கிருந்து சென்ற பின்னரும்கூட உயிருக்குப் போராடிய இளம்பெண் சுவாதிக்கு உதவி செய்யக்கூட யாரும் முன்வரவில்லை. உதவிக்கு யாரும் வராத நிலையில், தனி ஆளாகப் போராடி பலியாகியுள்ளார் இளம்பெண் சுவாதி. இக்கொலையைத் தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்த பயணிகளை விமர்சித்து, ‘நான்தான் சுவாதி பேசுகிறேன்’என, உருக்கமான பதிவு ஒன்று வாட்ஸ்-அப்’ பில் வெளியானது.

''இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சிலநாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்குமுன் உங்களுடன் சிலவற்றைப் பேசிவிட்டு போய்விட ஆசைப்படுகிறேன். எல்லாரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதாயத்தில் நானும் ஒருத்திதான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. இன்று நானும் வழக்கம் போல, என் அன்றாட வேலைக்குக் கிளம்பினேன். வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன், என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து, என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார். உங்களில் எத்தனை பேர் இன்று அந்தக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உங்களின் மனதுக்குத் தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழிய பேசியவர்கள் என்று எனக்குத் தெரியாது. இன்று நான் வாய்கிழியபட்டுத்தான் இறந்தேன். உங்களில் ஒருவருக்குக்கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே. அவனைத் தடுக்காத உங்களின் கயமைகூட எனக்குப் புரிந்தது. ஆனால் அவன் போனபின்பு எனக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தைப் போக்க தண்ணீர் கொடுக்கக்கூடவா ஆள் இல்லை. 2 மணி நேரம் என்னை வேடிக்கை பார்த்தீர்களே, அந்தக் கணங்கள்கூட உங்களைச் சுடவில்லையா? பெண் பிள்ளைகள் வெளியில் போகும்போது பார்த்துப் போகச் சொல்லும் நீங்கள், அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்தப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச் செய்யுங்கள்.'' இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இதை வாசித்தபோது ஏற்பட்ட கனத்த உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. கடந்த ஆண்டு கனமழை, பெருவெள்ளத்தில் மனிதாபிமானம் சிறந்து நின்ற சென்னையா? என்ற கேள்வி எழலாமல் இல்லை. மனித உறவுகள், மனித நலம், மனிதாபிமானம் என, மனிதம் பற்றி, பலவாறு பேசுகிறோம். இந்த உலகில் யாருமே தனித்து வாழ்ந்துவிட முடியாது. நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பயன்படுத்தும் அன்றாட அத்தியாவசியப் பொருள்கள் என, எல்லாமே பலருடைய உழைப்பாலும் உதவியாலும் நமக்குக் கிடைப்பவைதான். அதனால் நம் உறவுச் சங்கிலிகள் உறுதியாக அமைக்கப்பட்டால்தான், தனிநபரும் சரி, சமுதாயமும் சரி முன்னேறும். இதற்கு சகமனிதர் மீது, கபடற்ற, எதார்த்தமான அன்பும், ஆத்மார்த்தமான அக்கறையும், இதயத்தின் ஆழத்தில் சுரக்கும் இரக்கமும் நமக்கு அவசியம். பாரதியார் சொன்னார் – மற்றவர் உள்ளத்தில், உங்களைப் பற்றிய தவறான மதிப்பு ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளித்துவிடாதீர்கள் என்று.  

அன்பு இதயங்களே, சென்னையிலிருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த கோரமண்டல் விரைவு இரயிலில், கிருஷ்ணா என்ற 15 வயதுச் சிறுவன் பயணச்சீட்டு இல்லாமல் விசாகப்பட்டினத்தில் ஏறியிருக்கிறார். கட்டாக் செல்வதற்காக ஏறிய அச்சிறுவன், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், சிறுவனிடம் டிக்கெட் இல்லாததால் கோபமடைந்து,  சிறுவனைத் தள்ளிவிட்டதால், ரயில் பெட்டியின் வாசலில் நின்றுகொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக ஓடும் இரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார். இப்போது கிருஷ்ணா மருத்துவமனையில்! அன்பர்களே, இந்நிகழ்வோ, இளம்பெண் சுவாதி நிகழ்வோ மனிதரின் இரக்கப் பண்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. ஆயினும், இன்னும் பல செய்திகளை வாசிக்கும்போது, இத்தகைய மனிதரில் ஒருவராக நானும் ஏன் இருக்கக் கூடாது, இத்தகைய மனிதர்களால் சமுதாயம் நிரம்ப வேண்டும் என்ற ஆவலே அதிகரிக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஒருவர், சென்னை, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலில், பார்க்கிங் பண்ணியிருந்த தன்னுடைய பைக்கை எடுக்க வரும்போது, அதன் டெயில் லைட் உடைந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். யாரோ தன் வண்டியைப் பின்னால் எடுக்கும்போது மோதி உடைத்திருக்க வேண்டுமெனப் புரிந்து கொண்டார். முகம் தெரியாத அந்த நபரைக் கண்டபடி திட்ட வாய் வரைக்கும் வார்த்தை வந்தது. அப்போது உடைந்த லைட்டுக்குள்ளே ஏதோ பேப்பர் சுருட்டி வைத்திருந்ததைப் பார்த்த அவர், எடுத்துப் பிரித்தார். ‘ஸாரி சார், தெரியாம உங்க பைக் லைட்டை உடைச்சிட்டேன். ரொம்ப ஸாரி! இதுல 500 ரூபா வெச்சிருக்கேன். உங்க லைட்டை சரி பண்ணிக்குங்க!’ன்னு எழுதி, கூடவே 500 ரூபா நோட்டு ஒண்ணும் வெச்சிருந்தார் அவர். உடனடியாக இவருடைய கோபம் தணிந்துவிட்டது. ரூபாய் பெரிதில்லை; தான் உடைச்சதை யாரும்தான் பார்க்கவில்லையே, நமக்கென்ன என்று அப்படியே போகாமல், ஸாரி கேட்டு, அவர் ஒரு சின்ன குறிப்பு எழுதி வைத்திருந்ததுதான் இவர் மனதைத் தொட்டது. விகடன் இதழில் வாசித்த செய்தி இது. அண்மையில் நாம் கேள்விப்பட்ட மற்றொரு செய்தியையும் பகிர்ந்துகொள்கின்றோம்.

ஒருவர் கால் டாக்ஸி கூப்பிட்டாராம். வந்த ஓட்டுனர், கார் டயர் பழுதாகி நடுவழியில் நிற்பதால்தான் இவர் நம்மைக் கூப்பிட்டிருக்கார் எனத் தெரிந்து, அங்கேயே அப்பொழுதே டயரை மாத்திக் கொடுத்தாராம். “வேணாம்ப்பா! டயர் மாத்தணும்னா அரை மணி, முக்கா மணி நேரம் ஆகும். இதை அப்புறமா பார்த்துக்கலாம்”னு இவர் சொல்லியும், “இல்ல சார், இதோ இப்ப மாத்திடலாம்”னு சொல்லி, இருபதே நிமிடத்துல டயரை மாத்திக் கொடுத்து, அவர் தன்னோட கார்லேயே அலுவலகத்திற்குப் போகும்படிச் செய்துவிட்டாராம். டயர் மாத்திக் கொடுத்ததுக்காகப் பணம் கொடுக்க இவர் முன்வந்தப்போக்கூட, “வேண்டாம் சார், இதெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் செய்துக்கற உதவிதானே!”னு மறுத்துட்டாராம் அந்த ஓட்டுனர்.(நன்றி சக்தி விகடன்)

“இந்தக் காலத்தில இப்படியும் ஒரு மனிதர்ன்னு” முகநூலில் பாராட்டி செய்தி வந்தது. முகநூல், வாட்ஸ்அப்.. நவீனத் தொடர்புகளில் இப்படி நல்ல செய்திகள் உடனுக்குடன் வைரசாகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அன்பர்களே, நாம் சிறப்பாக வாழ வேண்டுமானால், மாதம் ஒருமுறையாவது, நம் தகுதிகளையும், தவறுகளையும் அலசிப்பார்த்து அவற்றுக்குத் தீர்வு காண்பது நல்லது. இதை ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்வதற்குமுன் செய்வது மிகவும் நல்லது என்கிறார்கள். ஏழைகள் மீது மிகவும் இரக்கம் காட்டி அவர்கள் முன்னேற உதவும் இயேசு சபை அருள்பணி சேவியர் வேதம் சொல்கிறார் – நான் இந்த உலகை ஒரேயோருமுறை மட்டுமே கடந்துசெல்வேன். எவ்வளவு நன்மைகள் செய்ய இயலுமோ, எனது சக மனிதருக்கு எவ்வளவு கனிவு காட்ட முடியுமோ அதை இப்பொழுதே செய்ய விரும்புகிறேன். ஏனென்றால் இந்த வழியே நான் மீண்டும் கடக்க மாட்டேன். ஒருவரின் வாழ்வு அவர் இவ்வுலகில் வாழும்போது மட்டுமல்லாமல், அவர் இறக்கும்போதும் சான்று பகர வேண்டும். எனது மரணம், அன்பு மற்றும் சேவைக்கு முடிவாக இருக்கக் கூடாது. அது தொடர்ந்து ஏழைகளுக்குத் தொண்டாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

அன்பு இதயங்களே, நம்புகிறவர்களைத் தேடி நல்ல காரியங்கள் வரும். பொறுமையுள்ளவர்களைத் தேடி, சிறந்த காரியங்கள் வரும். விடா முயற்சிசெய்பவர்களைத் தேடி மிகச் சிறந்த காரியங்கள் வரும் என்று ஓர் அறிஞர் சொன்னார். எனவே, எழுதுவோம் நம் வாழ்வு இலட்சியங்களை. வாழ்வாக்குவோம் அவற்றை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.