2016-06-27 15:54:00

ஏழை இஸ்லாமியர்களுக்கு உதவும் பங்களாதேஷ் புத்த துறவிகள்


ஜூன் 27, 2016. இரமதான் காலத்தில் உண்ணாநோன்பில் ஈடுபடும் ஏழை இஸ்லாமியர்களுக்கு, அன்னை தெரசா அவர்களின் வார்த்தைகளால் தூண்டப்பட்டு,  உதவி வருவதாக பங்களாதேசின் புத்தமத துறவு மடம் ஒன்று அறிவித்துள்ளது.

நாள் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து, சூரியன் மறைந்தபின்  நோன்பை முடிக்கும் வேளையில், உண்பதற்கு எதுவும் இல்லாமல் துன்புறும் ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக உணவு வழங்கி வருவதற்கு, அன்னை தெரேசா கூறியுள்ள வார்த்தைகளே காரணம் என்றார் பங்களாதேசின் டாக்கா புத்த துறவு இல்லத்தின் துணை இயக்குனர் Buddhapriya Mohathero.

'வறியோருக்கு உதவுவதன் வழியாக நாம் இறைவனைக் காண முடியும்' என அன்னை தெரேசா கூறியுள்ள வார்த்தைகளால் தூண்டப்பட்டே இந்த இரமதான் கால பிறரன்புப் பணிகளை மேற்கொள்வதாக உரைத்த புத்த மத துறவி,  இக்காலத்தில் ஒவ்வொரு நாளும் ஏழை இசுலாமியர்களுக்கு என 500 உணவுப் பொட்டலங்களை வழங்குவதாக தெரிவித்தார்.

1960ம் ஆண்டு, தலைநகர் டாக்காவில் கட்டப்பட்ட இந்த Dharmarajika  புத்த துறவு இல்லம், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான இல்லம், சிறு மருத்துவமனை, சிறார் கல்வி நிலையம் ஆகியவற்றுடன் சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றது.

இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட பங்களாதேசில், 0.7 விழுக்காட்டினரே புத்த மதத்தினர். 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.