2016-06-27 14:09:00

இது இரக்கத்தின் காலம் : இறைவன் தேடி அழைக்கும் நேரம்


அந்தக் கட்டடத்தின் 13வது தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் கட்டுமானப் பொறியாளர் ஒருவர். அதேநேரம், கட்டட மேற்பார்வையாளரிடம் ஒரு விடயத்தை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது. அந்தநேரம் மேற்பார்வையாளர், கீழே சித்தாள்களிடம் வேலைவாங்கிக் கொண்டிருந்தார். பொறியாளர், மேற்பார்வையாளரை கைபேசியில் அழைத்தார். வேலையில் தீவிரமாக இருந்த அவர், கைபேசி அழைப்பை கவனிக்கவே இல்லை. சிறிது யோசித்த பொறியாளர், ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து, அந்தக் கட்டட மேற்பார்வையாளருக்கு அருகில் தரையில் விழுமாறு கீழே போட்டார். தற்செயலாக, தரையில் ரூபாய் நோட்டைக் கண்ட அவர், அதை எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டாரே தவிர, மேலே பார்க்கவில்லை. அடுத்ததாக ஒரு ஐந்நூறு ரூபாய்த் தாளை கீழே போட்டார் பொறியாளர். அதையும் எடுத்துவைத்துக் கொண்ட மேற்பார்வையாளர், அதைப் போட்டது யார் என்று யோசிக்கக்கூட இல்லை. இப்போது பொறியாளர் பொறுமை இழந்தார். ஒரு சிறு கல்லை எடுத்து வேகமாக வீசியெறிந்தார். அது தன் தோளில் பட்டதும்தான் மேலே கவனித்தார் கட்டட மேற்பார்வையாளர். பொறியாளர் அழைக்கிறார் என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.

இறைவன் நமக்கு எண்ணற்ற அருள்கொடைகளை அளிக்கிறார். அப்போதெல்லாம் நம்மில் பலர், இறைவனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை; உலக மாயைகளில் சிக்கித் தவிக்கிறோம். ஆனால் துன்பம் நேரும்போது மட்டும்தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கிறோம். எனவே, துன்பங்கள் வரும் நேரம், இறைவன் நம்மைத் தேடி அழைக்கும் நேரம் என்று அர்த்தம். இவ்வாறு ஒரு பெரியவர் சொல்கிறார். இது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.