2016-06-26 12:29:00

ஞாயிறு திருவழிபாட்டின் இறுதியில் திருத்தந்தையின் ஆசியுரை


ஜூன்,26,2016. திருத்தந்தையே, அன்பு ஆயர்களே, அன்பு சகோதர, சகோதரிகளே, கடந்த சில நாட்கள், உங்கள் நாட்டின் கதவுகளைத் திறந்து, எனக்கு நீங்கள் வழங்கிய வரவேற்பின் வழியே, "சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது" (தி.பா. 133:1) என்பதை உணர்ந்தேன்.

“உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.” (எபேசியர் 4:4-6) திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை இன்று நமதாக்கி மகிழ்கிறோம். அர்மேனிய நாட்டில் நற்செய்தியை அறிவித்த புனிதர்கள், பார்த்தலோமேயு, ததேயு, மற்றும் உரோம் நகரில் உயிர் துறந்த புனித பேதுரு, பவுல் ஆகியோர் அனைவரும் நம் ஒன்றிப்பைக் கண்டு மனம் மகிழ்வர்.

இறைவனின் புனிதத்தை அறிக்கையிட்டு இவ்வழிபாட்டில் நாம் எழுப்பிய பாடல் விண்ணை நோக்கி எழுந்தது. விண்ணில் அன்னை மரியா, புனிதர்கள் ஆகியோரின் பரிந்துரையால், இறைவனின் ஆசீர் முழுமையாக இவ்வுலகத்தின் மீது இறங்கட்டும். இறைமகனும், தூய ஆவியாரும் நம் ஒன்றிப்பை உறுதிப்படுத்துவார்களாக. தூய ஆவியாரே, உமது வருகையால், எங்கள் நடுவில் இருக்கும் பிளவுகள் நீங்கி, ஒற்றுமை வளரட்டும்.

அர்மேனியத் திருஅவை அமைதியில் பயணத்தைக் தொடரட்டும். நமது ஒன்றிப்பு முழுமை அடையட்டும். நமக்காகப் பரிந்துபேசும் புனிதர்களின் விண்ணப்பங்களுக்கும், பணிவுள்ளோர், வறியோர் ஆகியோரின் குரல்களுக்கும் நாம் செவிமடுப்போம். பிளவுகள் அற்ற எதிர்காலத்தை விரும்பும் வருங்கால இளையோரின் விருப்பங்களுக்கு செவி சாய்ப்போம். இந்தப் புனிதத் தலத்திலிருந்து வெளிப்பட்ட நம்பிக்கையின் ஒளி, மீண்டும் ஒருமுறை இந்த நாட்டை ஒளிபெறச் செய்யட்டும்.

உயிர்ப்பு ஞாயிறன்று, நம்பிக்கையுடன் கல்லறைக்கு ஓடிச் சென்ற சீடர்களுக்கு, புதிய நம்பிக்கையால் ஆசீர் வழங்கிய இறைவன், இந்த ஞாயிறன்றும், நம் அனைவரின் ஒன்றிப்பை துரிதப்படுத்தி, நம்மை ஆசீர்வதிப்பாராக!

கத்தோலிக்கோஸ் அவர்களே, இறைவனின் பெயரால் உங்களிடம் வேண்டுகிறேன். என்னையும், கத்தோலிக்கத் திருஅவையையும் நீங்கள் ஆசீர்வதியுங்கள்! நம் முழுமையான ஒன்றிப்பு முயற்சிகளையும்  ஆசீர்வதியுங்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.