2016-06-26 13:19:00

எரேவான் நகரில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு


ஜூன்,26,2016. அர்மேனிய நாட்டுத் தலைநகர் எரேவான் நகரின் குடியரசு வளாகத்தில், மாலை 5 மணிக்கு கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு தொடங்கியது. இதில் முதலில் உரையாற்றிய கத்தோலிக்கோஸ் 2ம் Karekin அவர்கள், இக்காலத்தில் Caucasus பகுதியைப் பாதித்துள்ள துன்பங்கள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். Nagorno-Karabakh குடியரசு குறித்து, கடந்த ஏப்ரலில் மீண்டும் தொடங்கிய சண்டையில், அர்மேனியக் கிராமங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இருதரப்பிலும் படைவீரர்களும், அப்பாவி குடிமக்களும் இறந்தனர் என்ற அவர், நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்ற அர்மேனிய இனப்படுகொலை பற்றியும் குறிப்பிட்டார். முதல் உலகப்போரில் துருக்கியின் நேச நாடாக இருந்த ஜெர்மனி உட்பட பல நாடுகள், அண்மையில் அர்மேனியப் படுகொலைகளை அங்கீகரித்துள்ளன. இது, அப்பகுதியில் அமைதிக்கும் ஒப்புரவுக்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது என்றார். திருத்தந்தையும் இவ்வழிபாட்டில் மறையுரையாற்றினார். முழுமையான கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக உழைப்பது, அன்பு, தாழ்மை மற்றும் அமைதியின் திட்டம் எனச் சொல்லி, முழுமையான கிறிஸ்தவ ஒன்றிப்புக்காகப் பணியாற்றுமாறு அர்மேனியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இச்செபவழிபாட்டின் இறுதியில், திருத்தந்தையும் கத்தோலிக்கோஸ் அவர்களும், அர்மேனிய இளையோரால் புதிதாக நடப்பட்ட திராட்சைச் செடிக்குத் தண்ணீர் ஊற்றினர். பழைய ஏற்பாட்டில் பெருவெள்ளம் வடிந்தபோது நோவாவின் பேழை, அரராத்து மலைத்தொடர் மேல் தங்கியது (தொ.நூ.8,4) என்று விவிலியத்தில் வாசிக்கிறோம். அர்மேனியாவின் கிழக்குப் பகுதி முழுவதும், பனிபடர்ந்த அரராத்து மலைத்தொடர் உள்ளது. எனவே, அர்மேனிய இளையோர், நோவாவின் பேழையின் வடிவில், இந்தத் திராட்சைச் செடியை நட்டு வைத்திருந்தனர். கிறிஸ்தவ ஒன்றிப்பு, அமைதி ஆகிய இரு மையக் கருத்துக்களைக் கொண்டிருந்த இச்சனிக்கிழமை மாலை நிகழ்வு இத்துடன் நிறைவடைந்தது. அதன்பின்னர், அந்த வளாகத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கின்ற Etchmiadzin சென்று, திருப்பீட தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை. மேலும், இச்சனிக்கிழமை தனது டுவிட்டரில், "அர்மேனியர்களின் துன்பங்கள் நம்முடையவை, அவை, கிறிஸ்துவின் மறையுடலின் உறுப்பினர்களின் துன்பங்கள்" என்றும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.