2016-06-26 13:12:00

அப்போஸ்தலிக்கப் பேராலயம், கத்தோலிக்கப் பேராலயச் சந்திப்பு


ஜூன்,26,2016. "முதல் கிறிஸ்தவ நாட்டுக்குப் பயணம்" என்ற மையக் கருத்துடன் அர்மேனிய நாட்டுக்கு, இவ்வெள்ளியன்று, தனது மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணத்தின் இரண்டாவது நாளாகிய இச்சனிக்கிழமை காலையில், கிறிஸ்தவ வாழ்வையும், சமுதாயத்தையும் கட்டியெழுப்புவதற்கு, நினைவு, விசுவாசம், இரக்கம்நிறை அன்பு ஆகிய மூன்றும் நிலையான அடித்தளங்கள் என்று கூறினார். அர்மேனிய இனப் படுகொலை மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான Gyumriல் நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை. இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.45 மணிக்கு, அதாவது இந்திய நேரம் மாலை 6.15 மணிக்கு, Gyumri நகரின் “Yot Verk” அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைப் பேராலயத்திற்குச் சென்றார் திருத்தந்தை. இறைவனின் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பேராலயத்தின் உட்பகுதியை, வியாகுல அன்னை அற்புதமாகக் காப்பாற்றியதை நினைவுகூரும் விதமாக, இந்தப் பேராலயம், அன்னை மரியாவின் ஏழு வியாகுலங்கள் பேராலயம் என அழைக்கப்படுகிறது. முன்னாள் சோவியத் யூனியனின் கம்யூனிச ஆட்சியில், Gyumri நகரின் “Yot Verk” பேராலயம் தவிர, அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மூடப்பட்டிருந்தன 1988ம் ஆண்டில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த இந்தப் பேராலயத்தை, அர்ஜென்டீனா நாட்டில் வாழும் அர்மேனியக் குடியேற்றதாரர் சீரமைக்க உதவினர். Gyumri நகரின் வியாகுல அன்னை பேராலயம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவரான கத்தோலிக்கோஸ் 2ம் Karekin அவர்களையும், அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவை ஆயர்கள், சில மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் வரவேற்றனர். திருத்தந்தையும், அர்மேனிய கத்தோலிக்கோஸ் அவர்களும் வியாகுல அன்னை திருப்படத்திற்கு முன்பாகச் செபித்தனர். பின்னர் இவ்விருவரும், திருச்சிலுவைக்கு ஆராதனை செலுத்தினர். அதன்பின்னர் திருத்தந்தை தனது  அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார். பேராலயத்தைவிட்டு வெளியே வந்தபோது அர்ஜென்டீனா நாட்டு நன்கொடையாளர் ஒருவர் திருத்தந்தைக்கு ஒரு பரிசுப்பொருளையும் அளித்தார்.

“Yot Verk” பேராலயத்திலிருந்து, திருத்தந்தையும், அர்மேனிய கத்தோலிக்கோஸ் அவர்களும் Gyumri நகரின் கத்தோலிக்கத் திருஅவையின் பேராலயம் சென்றனர். இப்பேராலயத்தின் கட்டுமானப்பணி, 2010ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டு, 2015ம் ஆண்டில் நிறைவடைந்தது. முதலில் இது திருச்சிலுவை பேராலயம் என அழைக்கப்பட்டு, பின்னர், புனித மறைசாட்சிகள் பேராலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அர்மேனிய இனப்படுகொலைக்குப் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவ்வாறு மாற்றப்பட்டது. இப்பேராலயம், அர்மேனியா, ஜார்ஜியா, இரஷ்யா மற்றும் அர்மேனிய கத்தோலிக்கத் திருஅவையின் கிழக்கு ஐரோப்பாவுக்குத் தலைமை ஆலயமாக விளங்குகிறது. இங்கு, கத்தோலிக்கப் பேராயர் Raphael Francois Minassian, பங்குக் குருக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் வரவேற்றனர். அங்குச் செபித்து ஆசீர் அளித்த பின்னர், Gyumri நகரிலிருந்து, எரேவான் நகருக்கு விமானத்தில், திருத்தந்தையும், கத்தோலிக்கோஸ் அவர்களும் புறப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.