2016-06-25 13:11:00

கியூம்ரி வளாகத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


ஜூன்,25,2016. “நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றை அவர்கள் கட்டியெழுப்புவார்கள்; முற்காலமுதல் பாழாய்க் கிடந்தவற்றை நிலைநிறுத்துவார்கள்; தலைமுறை தலைமுறையாக இடிந்து அழிந்துகிடந்த நகர்களைச் சீராக்குவார்கள்.” (எசாயா 61:4) 

அன்பு சகோதர, சகோதரிகளே, இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் இவ்விடத்தில் பொருளுள்ளதாகத் தெரிகின்றன. நிலநடுக்கத்தின் அழிவுகளுக்குப் பின், மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ள அனைத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்.

நம் வாழ்வில் எதை கட்டியெழுப்ப இறைவன் நம்மை அழைக்கிறார்? எதை அடித்தளமாகக் கொண்டு நம் வாழவைக் கட்டியெழுப்ப வேண்டும்? கிறிஸ்தவ வாழ்வைக் கட்டியெழுப்ப மூன்று அடித்தளங்களை நான் முன்வைக்க விழைகிறேன்.

முதல் அடித்தளம், நம் நினைவுத் திறன். இறைவன் நமக்குச் செய்ததையெல்லாம் நினைவுகூர வேண்டும் என்று இன்றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது (லூக்கா 1:72)

இறைவன் நம் வாழ்வில் ஆற்றிய செயல்களை நினைவுகூர்ந்து, அவற்றை போற்றி பாதுகாக்க வேண்டும்.

மற்றொரு நினைவு, மக்களை சார்ந்தது. அர்மேனிய மக்களின் நினைவுகள், மிகப் பழமை வாய்ந்தவை. உங்கள் வரலாற்றில் பல கொடுமைகளைக் கண்டாலும், இறைவன் உங்களைக் கைவிடவில்லை என்ற உறுதியை நீங்கள் தொடர்ந்து நினைவில் கொள்ளவேண்டும். "அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்" (லூக்கா 1:68) என்று நாம் நற்செய்தியில் வாசித்த வார்த்தைகள், அர்மேனிய மக்களுக்கு மிகவும் பொருத்தமானவை.

நான் கூறவிழையும் இரண்டாவது அடித்தளம், நம்பிக்கை. நம் வரலாற்று நினைவுகளை அருங்காட்சியகப் பொருளாக மாற்றி, பூட்டி வைத்துவிடுவதால், நம் நம்பிக்கையின் ஒளி மங்கிவிடுகிறது. பூட்டிவைக்கப்பட்ட பழைய நினைவுகளில் அல்ல, மாறாக, ஒவ்வொருநாளும் இறைவன் தொடர்ந்து ஆற்றிவரும் செயல்களை உணர்வதால் நம் நம்பிக்கை வாழ்கிறது. ஒவ்வொரு நாள் வாழ்வில் இறைவன் தொடர்ந்து செயலாற்றுவதை உலகறியச் செய்வது, நீங்கள் ஆற்றக்கூடிய நற்செய்திப் பணி.  இத்தகையப் பணி, இன்றைய உலகிற்கு மிகவும் தேவைப்படுகிறது.

நினைவுத் திறன், நம்பிக்கை என்ற இரு அடித்தளங்களுக்கு அடுத்ததாகத் தேவைப்படும் மூன்றாவது அடித்தளம், இரக்கம் நிறைந்த அன்பு. இந்த அன்பைச் செயல்படுத்துவதால், திருஅவையின் முகம் புதுப்பிக்கப்பட்டு, அழகு பெறுகிறது. நடைமுறை வாழ்வில் வெளிப்படும் அன்பு, கிறிஸ்தவர்களின் அடையாள அட்டை. வேறு எவ்வகையிலும் நாம் அடையாளப்படுத்தப்படுவது தவறாக முடியும். நாம் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர் (யோவான் 13:35).

எங்கெல்லாம் அன்பு உள்ளதோ, குறிப்பாக, வலுவற்றோர், வறியோர் இவர்களிடம் அன்பு காட்டும்போது, அங்கெல்லாம் இறைவன் இருக்கிறார். எதிர்ப்புகளைக் கண்டு மனம் தளராமல், பணியாற்ற விழையும் கிறிஸ்தவர்கள் இன்றைய உலகிற்குத் தேவை. சொல்லால் மட்டுமல்லாமல், செயல்வடிவிலும் தன் சகோதர சகோதரிகளுக்கு உதவும் நல்மனம் கொண்டோர், இன்றைய உலகிற்குத் தேவை.

நம்மிடமும், பிறரிடமும் குறைகள் இருக்கும்போது, எவ்விதம் இரக்கம் காட்டமுடியும்? நரேக் நகர் புனித கிரகோரியின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கூற விழைகிறேன். மிகக் கொடுமையான மனித அவலங்களை அவர் அனுபவித்தாலும், இறைவன் மீது நம்பிக்கை தளராமல், செபித்து வந்தவர், புனித கிரகோரி. இறைவனின் இரக்கம் நம் அனைவருக்கும் தேவை என்பதை இப்புனிதர் நமக்குச் சொல்லித் தந்துள்ளார்.

புனித கிரகோரியின் வார்த்தைகளைப் பயன்படுத்தி, இறைவனின் தவறாத அன்பிற்காக மன்றாடுவோம்: தூய ஆவியானவரே, "எம்மைக் காக்கும் சக்தி கொண்டவரே, அமைதியை உருவாக்குபவரே, உம்மிடம் எங்கள் செபங்களை எழுப்புகிறோம். நாங்கள் ஒருவர் ஒருவரை, பிறரன்பாலும், நற்செயல்களாலும் தாங்கிப் பிடிக்க உதவியருளும். இரக்கமே உருவானவரே, எம்மீது இறங்குவீர்".

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.