2016-06-25 12:58:00

அர்மேனிய அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


ஜூன்,25,2016. அரசுத் தலைவரே, அரசு அதிகாரிகளே, பன்னாட்டுத் தூதர்களே, அன்பு சகோதர, சகோதரிகளே, செறிவு மிகுந்த பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள மக்களை சந்திப்பது எனக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது. எத்தனையோ இன்னல்கள் நடுவில், நீங்கள் காத்து வந்துள்ள நம்பிக்கை, வீரம் மிகுந்த சாட்சியமாகத் திகழ்கிறது.

"எங்கள் நீல வானம், தெளிந்த நீர் நிலைகள், ஒளி வெள்ளம், கோடை வெயில், பழம்பெரும் கற்கள், எங்கள் செபமாக மாறிவிட்ட பழமையான நூல்கள்" என்று உங்கள் கவிஞர் கூறியுள்ள வரிகள், உங்கள் நாட்டின் சக்தி வாய்ந்த அடையாளங்களை பதிவு செய்துள்ளன.

அரசுத் தலைவரே, நீங்களும், அர்மேனிய முதுபெரும் தந்தை, இரண்டாம் கரேக்கின் அவர்களும், மேலும் சில தலைவர்களும், வத்திக்கான், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு நூற்றாண்டு வழிபாட்டில் கலந்து கொண்டீர்கள். "பெரும் தீமை" என்று பொருள்படும் Metz Yeghérn படுகொலையில் உயிரிழந்தோர் நினைவாக அந்த வழிபாடு நிகழ்ந்தது. தவறான முற்சார்பு எண்ணங்களால், ஓரினத்தைச் சேர்ந்தவர்களை முற்றிலும் அழிக்கும் கருத்துடன் சென்ற நூற்றாண்டு நிகழ்ந்த பல்வேறு துயர நிகழ்வுகளின் ஆரம்பமாக இந்த படுகொலைகள் நிகழ்ந்தன.

இத்தகையக் கொடுமைகள் நடுவிலும், நற்செய்தியின் ஒளியுடன், சிலுவை, உயிர்ப்பு ஆகியவற்றில் தங்கள் நம்பிக்கையைக் காத்து வந்த அர்மேனிய மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். இத்தகையக் கொடுமைகளை மனித சமுதாயம் இனி தொடராது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உரையாடல் வழியே அனைத்து வேறுபாடுகளையும் தீர்ப்பதற்கு எல்லாரும் இணைந்து வரவேண்டும்.

மனிதர்களின் மதிப்பையும், உரிமைகளையும் காக்கும் அனைவரோடும் கத்தோலிக்கத் திருஅவை இணைத்து உழைக்க விரும்புகிறது. இந்நேரத்தில் நாம் ஒன்றை புரிந்துகொள்வது அவசியம். மதத்தின் பெயரால், போர்களையும், அடக்கு முறைகளையும், வன்முறைகளையும் வளர்க்கும் அனைத்து சக்திகளையும் தனிமைப்படுத்தி, கட்டுப்படுத்துவதற்கு, இறை நம்பிக்கையுள்ள அனைவரும் இணைந்து வரவேண்டும்.

இன்றைய உலகில் தங்கள் மத நம்பிக்கைக்காக அடக்கு முறைகளையும், வன்முறைகளையும் சந்திப்போரின் எண்ணிக்கை கூடியுள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பாலான துயரங்களை அனுபவிக்கின்றனர். இக்கொடுமைகளை அகற்றி, நீதியை நிலைநாட்டுவது அரசுகள் மேற்கொள்ளவேண்டிய அவசரமான, முக்கிய முயற்சி.

கொடுமைகளை நேருக்கு நேர் சந்தித்து, அவற்றிலிருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ள அர்மேனிய மக்கள், அனைத்து உலகிற்கும் எடுத்துக்காட்டாக திகழவேண்டும்.

அர்மேனியா நாடு சுதந்திரம் பெற்ற 25வது ஆண்டு இது. நீங்கள் மேற்கொண்டுள்ள கொண்டாட்டங்கள், இந்நாட்டில் வாழ்வோருக்கும், ஏனைய நாடுகளில் வாழும் அர்மேனிய மக்களுக்கும் மகிழ்வை வழங்கட்டும். 

உங்கள் நாட்டு வரலாறும், கிறிஸ்தவ மறையின் வரலாறும் இணைந்து சென்றுள்ளன. இந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் மகத்தானவை. இறைவன், அர்மேனியா நாட்டையும், மக்களையும் ஆசீர்வதித்து, காப்பாராக. எத்தனை துயர் வரினும் தொடர்ந்து செல்வதற்கு இந்நாட்டு மக்களிடம் காணப்படும் நம்பிக்கை, உலகினர் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.