2016-06-24 15:08:00

அர்மேனிய அப்போஸ்தலிக்கப் பேராலயத்தில் திருத்தந்தையின் உரை


ஜூன்,24,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, இந்நாட்டு மக்களின் வரலாற்றுக்கும், ஆன்மீகத்திற்கும் மையமாக விளங்கும் இவ்வாலயத்திற்குள் நுழைந்தது, மனதைத் தோட்ட அனுபவமாக அமைந்துள்ளது. ஆர்மேனியா நாட்டில் கிறிஸ்துவின் ஒளியைப் பரப்பக் காரணமாக இருந்த இந்தப் பீடத்தை நான் அணுகியுள்ளது, இறைவன் எனக்கு வழங்கிய ஒரு கொடையாகக் கருதுகிறேன்.

உரோமைய அரசு முழுவதும் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்ட காலத்தில், 301ம் ஆண்டு, ஆர்மேனியா நாடு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட முதல் நாடாகத் திகழ்ந்தது. ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப உடைகளை மாட்டி, கழற்றுவதுபோல் அல்லாமல், ஒருவரின் அடிப்படை அடையாளமாக, கிறிஸ்துவ நம்பிக்கை, இந்நாட்டில் அமைந்தது. ஒளிமிக்க சாட்சிகளாகத் திகழ்ந்த உங்கள் நம்பிக்கைக்காக இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஒரே திருவிருந்தில் பங்கேற்பதற்கு உறுதுணையாக, கத்தோலிக்கத் திருஅவையும் ஆர்மேனிய அப்போஸ்தலிக்க திருஅவையும் மேற்கொண்டு வரும் உரையாடல் முயற்சிகளுக்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். இந்த இணைப்பை உறுதி செய்யும் வண்ணம், ஆர்மேனியத் திருஅவையின் தலைவர்கள், முதலாம் வாஸ்கென் (Vasken I) மற்றும் முதலாம் கரேக்கின் (Karekin I), கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர்கள், புனித இரண்டாம் ஜான்பால், மற்றும் 16ம் பெனடிக்ட் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகளை இந்நேரத்தில் நான் மகிழ்வுடன் நினைவுகூருகிறேன்.

நமது உலகம் பிரிவுகளாலும், மோதல்களாலும் நிறைந்துள்ளது. பொருளாதார, ஆன்மீக வழிகளில் வறுமைப்பட்டுள்ளது. மக்களை, குறிப்பாக, குழந்தைகளையும், வயதில் முதிர்ந்தோரையும் கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறது. இந்தச் சூழலில், கிறிஸ்துவின் உயிர்ப்பு தரும் சக்திக்கும், உண்மைக்கும் சாட்சிகளாக கிறிஸ்தவர்கள் விளங்கவேண்டும் என்று உலகம் நம்மிடம் எதிர்பார்க்கிறது.

கிறிஸ்தவ உலகில் நிலவும் ஒற்றுமை, இருள் சூழ்ந்த இவ்வுலகில் ஒளியாக அமையவேண்டும். உரையாடல், ஒருவர் மீது ஒருவர் காட்டும் மதிப்பு என்ற வழிகளில் நாம் மேற்கொள்ளும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகள், பிளவுபட்டிருக்கும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டாக அமையும். நாம் மேற்கொள்ளும் ஒப்புரவு முயற்சிகள், நாடுகளுக்கிடையே ஒப்புரவையும், உரையாடலையும் ஊக்குவிக்கும் முயற்சிகளாக அமையும். இறைவன் அன்பும் கருணையும் உள்ளவர் என்பதற்கு நாம் இவ்வாறு சான்று பகர முடியும்.

அன்பு சகோதர, சகோதரிகளே, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் கிறிஸ்துவின் அன்பினால் தூண்டப்பட்டதாக இருந்தால், ஒருவர் ஒருவர் மீது புரிதலும், மதிப்பும் கொண்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு, நல்லதொரு பயணமாக அமைவதற்கு வாய்ப்பு உருவாகும். மோதல்களால் காயப்பட்டிருக்கும் நம் சமுதாயத்தில், நல்மனம் கொண்டோர், சமுதாயக் காயங்களைக் குணமாக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க நாம் ஓர் எடுத்துக்காட்டாக அமையமுடியும்.

இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய இறைவன், புனிதரான கிரகோரி, மற்றும், மறைவல்லுனரான நரேக் நகர் புனித கிரகோரி ஆகியோரின் பரிந்துரையால், ஆர்மேனிய நாட்டையும், உங்கள் அனைவரையும் ஆசீர்வாதிப்பாராக. உங்கள் முன்னோர் வழியே நீங்கள் பெற்றுக்கொண்ட நம்பிக்கைக்கு தலைசிறந்த சாட்சிகளாக நீங்கள் வாழ உங்களைக் காத்து வழிநடத்துவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.