2016-06-23 15:14:00

குருத்துவத்தின் மையம் கடவுளில் மூழ்கியிருப்பது


ஜூன்,23,2016. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், பணி ஓய்வு பெற்று, முழுநேரமும் செபத்தில் செலவழிப்பதற்கு எடுத்த தீர்மானம், உலகின் அருள்பணியாளர்களுக்கு அவர் வழங்கும் மிக முக்கிய படிப்பினைகளில் ஒன்றாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 65வது குருத்துவத் திருநிலைப்பாட்டை முன்னிட்டு வெளியிடப்படவுள்ள புதிய நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுளின் அன்பைப் போதிக்கவும், கற்றுக்கொள்ளவும் என்ற தலைப்பில் ஜெர்மன், இஸ்பானியம் மற்றும் இத்தாலிய மொழிகளில், இம்மாதம் 29ம் தேதி (ஜூன்,29) இந்நூல் வெளியிடப்படவுள்ளது.

குருத்துவத் திருப்பணியின் மையம், கடவுளில் முழுமையாய் மூழ்கியிருக்கும் வாழ்வு என்பதை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது பணி ஓய்வு காலத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி வருகிறார் என்றும் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தியாக்கோன்கள், அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்கள் இதனை ஒருபோதும் மறக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் ஒவ்வொரு நேரமும், அவர் எவ்வாறு தனது இறையியலை இன்றும் வாழ்கிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 28ம் தேதி வத்திக்கான் மாளிகையில் இடம்பெறும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 65வது குருத்துவத் திருநிலைப்பாட்டு நிறைவு நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.